அடுத்தடுத்த மூன்று திரைப்படங்களை வெற்றி படங்களாக கொடுத்து தமிழ் சினிமாவின் பார்வையை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் கோமாளி திரைப்படத்தில் இயக்குனராகவும், லவ் டுடே திரைப்படத்தில் இயக்குனர் பிளஸ் நடிகராகவும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். கடைசியாக வெளிவந்த டிராகன் திரைப்படத்தில் அவர் நடிகராக மட்டுமே பங்களித்து அசத்தியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமர்சியல் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பச்சை கொடி காட்டியதால், வெறும் 35 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
டிராகன் திரைப்படத்திற்கு முன்பாகவே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பிரதீப் ரங்கநாதன். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதனை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் சிவன் ஏற்கனவே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்னும் பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டு இருந்தார். எல்ஐசி என இதற்கு சுருக்கமாக பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இதில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில்தான், அந்தக் கதை பிரதீப் ரங்கநாதனுக்கு சென்றது. டைம் டிராவல் கான்செப்ட்டை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா.
பலரும் ஆச்சரியப்படும் வகையில், பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் டைட்டிலுக்கு எல்ஐசி நிறுவனம் சார்பில் எதிர்ப்பு கிளம்பியதால், அதன் பெயரை எல்.ஐ.கே என்று மாற்றினார்கள். இதன் சூட்டிங் பணிகள் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்த சூழலில் அண்மையில் மலேசியாவில் நிறைவு பெற்றது.
படம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் என்பதால், படத்தின் ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்தார்கள். ஆனால் தற்போது மீண்டும் எல்ஐகே திரைப்படம் தள்ளிப் போக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குதான் இந்த திரைப்படம் வெளியாகும் என்று பேசிக் கொள்கிறார்கள்.





