தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு சிறந்த மனிதராக அவர் வாழ்ந்தவர் என்றால் அது மிகையல்ல. சினிமாவில் மட்டுமின்றி அரசியல் களத்தில் அவர் ஹீரோவாக இருந்தார். அவர் உடல் நலக்குறைவால் மறையாமல் இருந்திருந்தால் தமிழகம் எம்ஜிஆரை போலவே ஒரு நல்ல முதல்வரை பார்த்திருக்கும்.
விஜயகாந்தை பொருத்த வரை புரட்சித் தலைவர் எம்ஜிஆரை போலவே உதவும் குணம் கொண்டவர். உதவி கேட்காதவர்களுக்கு கூட உதவி தேவைப்படும் என்று தெரிந்து விட்டால் தானாகவே முன்வந்து உதவும் குணம் மிக்கவர். அதனால்தான் விஜயகாந்த்தை மக்கள் கொண்டாடினார்கள்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்துக்கு நண்பர்கள் ஏராளம். தன் நண்பர்களில் பலரையும் அவர் தனது படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார். மற்ற நடிகர்களுக்கும் திறமை இருந்தும் வாய்ப்பில்லை என்றால் தன்னுடைய படங்களில் அவர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு தந்து அவர்களை முன்னுக்கு கொண்டு வந்து விடுவார். இப்படி கேப்டனால் அடையாளம் கிடைத்த பல நடிகர்கள் உள்ளனர்.
அப்படிப்பட்ட நண்பர்களில் ஒருவர்தான் நடிகர் தியாகு. பல படங்களில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார். கேப்டனின் நெருக்கமான நட்பு வட்டத்தில் நீண்ட காலம் இருந்தவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் தியாகு கூறியதாவது. நான் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்றேன்.
அப்போது கட்சியின் உத்தரவுப்படி என் நண்பன் விஜயகாந்தை கடுமையாக திட்டிப் பேசியிருக்கிறேன். ஒருமுறை தேமுதிக எம்எல்ஏ ஒருவர், தியாகு உங்களைப் பற்றி மிகவும் தவறாகப் பேசியிருக்கிறார் என்று விஜயகாந்திடம் கூறியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் சொன்ன பதில்தான் என்னை நெகிழவைத்தது.
அவன் ஒரு கட்சியில் இருக்கிறான். கட்சி தலைமை என்ன சொல்லுதோ அதைச் செய்திருக்கான். என்னைக்குமே அவன் என் நண்பன்தான். கட்சியில் இருக்கும்போது அப்படித்தான் பேச சொல்லுவாங்க என்று கூறி அந்த எம்எல்ஏவின் வாயையே கேப்டன் அடைத்துவிட்டார். இந்த சம்பவத்தை பின்னர் ஒரு எம்எல்ஏ என்னிடம் சொன்னபோது நான் அழுதுவிட்டேன். அப்போதுதான் விஜயகாந்த் எவ்வளவு பெரிய மனசுக்காரர் என்பதை உணர்ந்தேன் என்று தியாகு அப்போது கூறியிருக்கிறார்.





