நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் பெற்ற அளவுக்கு, அவருக்கு நடிப்பில் வரவேற்பை பெற்ற அளவுக்கு அந்த படத்துக்கு கதை வசனம் எழுதிய மு கருணாநிதியும் அதிகம் கவனம் பெற்றவர். அரசியலிலும் பிஸியாக இருந்தாலும் பல படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி.
தனது தாத்தாவை போலவே ஆரம்பத்தில் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டியவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் விளையாட்டு துறை அமைச்சராகவும் அரசியலில் பிஸியாக இருந்து வருகிறார்.
அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி சரவணன் இருக்க பயமேன் மாமன்னன் நெஞ்சுக்கு நீதி சைக்கோ மனிதன் இது கதிர்வேலன் காதல் நண்பேன்டா கண்ணே கலைமானே நிமிர் பொதுவாக எம்மனசு தங்கம் போன்ற பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதில் இயக்குனர் எழில் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ரெஜினா கசாண்ட்ரா சிருஷ்டி டாங்கே சூரி உள்ளிட்டோர் நடித்த படம் சரவணன் இருக்க பயமேன். இந்த படம் காதல் படமா பேய் படமா, காமெடி படமா என்று ரசிகர்களே குழம்பும் அளவுக்கு படத்தின் கதை திரைக்கதை இருந்தது. ஒரு பாடல் காட்சியில் ரெஜினா, எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்திருந்தது பேமிலி ஆடியன்ஸை அதிர வைத்தது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, என் பேமிலிக்கு இந்த படத்தை பிரிவ்யூ போட்டு காட்டினேன். என் சிஸ்டர் பாதியிலேயே எந்திரிச்சு போயிட்டாங்க. இன்டர்வெல்லுக்கு அப்புறம் அவங்களை காணோம். என்னாச்சு, ஏதாவது முக்கியமான வேலையா என்று கேட்டேன்.
இதெல்லாம் ஒரு படம், நீ எங்களை எல்லாம் தைரியமா ப்ரிவியூவுக்கு வேற கூப்பிட்டிருக்கே என்றார். ஆனால் கமர்ஷியலாக அந்த படம் போனது. ஆனா கடைசி வரைக்கும் எங்களுக்கு அது காமெடி படமா, பேய் படமான்னே தெரியலே. ஆனா அந்த படம் நல்லா ஓடுச்சு. அப்பதான் எனக்கு தெரிஞ்சது, ஓ… இதுதான் நம்ம தமிழ் சினிமா ரசிகர்களோட ரசனையா. இதுல லாலா கடை சாந்தி பாட்டு செம ஹிட் ஆச்சு என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.





