தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இப்போது நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக ஒரு கலைஞராக அவர் இருந்து வருகிறார். அவரது படங்களில் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை.
மார்கன் படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் சக்தி திருமகன். இந்த படம் 19ம் தேதி (நாளை) திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இது நடிகர் விஜய் ஆண்டனியின் 25வது படமாகும். இந்த படத்தில் வாகை சந்திரசேகர் சுனில் கிருபாலானி செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஜய் ஆண்டனி அவரே சொந்தமாக படத்தை தயாரித்துள்ளார். மேலும் படத்துக்கு அவரே இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான சக்தி திருமகன் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மதுரையில் நடந்த சக்தி திருமகன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.
அப்போது நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, சக்தி திருமகன் படத்தில் பல திறமையான நடிகர்கள் உள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும்போது நான் ஒரு நடிகன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு தகுதியே இல்லை. எனக்கு இருக்கும் ஒரே பலம் நான் நல்ல கதைகளை தேர்வு செய்வதுதான். அந்த கதைகள் தான் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறது.
என்னை போல கதையைத் தேர்வு செய்யும் பழக்கம் இப்போது தமிழில் வேறு யாருக்கும் இல்லை. உதாரணமாக பிச்சைக்காரன் படத்தில் ஒரு யாசகராக நடிக்க எந்த நடிகரும் சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் நான் அத்தகைய முடிவுகளை தைரியமாக எடுத்து இருக்கிறேன். நல்ல கதை தான் என்னை நடிகனாக மாற்றியது.
இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் பல புதிய இயக்குனர்கள் உருவாகுவார்கள். அதற்காகத்தான் நான் நடிக்கிறேன். நான் ஒரு நடிகன் என்பதற்காக அல்ல என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார். சக்தி திருமகன் படத்துக்கு முதலில் பராசக்தி என பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படம் உருவான நிலையில், விஜய் ஆண்டனி அந்த டைட்டிலை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





