தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பிறகு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்த விஜய் ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது விஜய் ஆண்னைி கூறியதாவது, இந்த முறை வாக்குப்பதிவு அதிகமாக உள்ளது. மக்கள் அதிகமாக ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை செலுத்துகிறார்கள். இது ஒவ்வொரு முறையும் அதிகரித்துக் கொண்டே வருவது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. மக்கள் இப்படி வாக்களித்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
அரசியலிலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ரீ டேக் என்பது இருக்கிறது. சினிமா அரசியல் என எல்லாத்துறைகளிலும் மிகவும் சவாலான கடினமான துறை தான். பொதுமக்களுக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்றே ஒன்றுதான். வெளிநாடுகளில் பல நாடுகளில் போர் பொறாமை சண்டை பிரச்சனை என்று ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி கிடையாது.
எங்காவது ஒரு சில இடங்களில் சில குற்றங்கள் நிகழ்வதற்கு நாம் ஒரு அரசை மொத்தமாக காரணம் காட்ட முடியாது. நாம் எங்கு எந்த தவறு நடந்தாலும் அரசை காரணம் காட்டி பழகிவிட்டோம். ஆனால் நாம் நம்மை பார்த்துக் கொள்வது போல நமது வீட்டை பார்த்துக் கொள்வது போல நமது வீதியை பார்த்துக் கொள்வது போல பொறுப்பு இருக்கிறது.
மக்களால் தான் ஒரு அரசு செயல்படுகிறது. மக்கள்தான் இந்த அரசை நடத்துகிறார்கள். ஒரு அரசாங்கத்தை மக்கள் நடத்துவதற்கு அரசு உதவியாக இருக்கிறது. அவ்வளவுதான். நாட்டை நன்றாக வைத்துக் கொள்வதில் மக்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. எல்லாவற்றுக்கும் அரசியல் காரணம் காட்டுவது சரியான ஒன்று கிடையாது.
நான் பல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறேன். இந்திய அரசு குறிப்பாக தமிழ்நாடு அரசு மிக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்குப் பின்னர் அமையும் அரசும் அதை தான் செய்யும். இனி வருபவர்களும் அதை தான் செய்வார்கள். நீண்ட நாட்களாகவே அரசாங்கத்தை மிக நல்லபடியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து யார் வந்தாலும் அவர்கள் நல்லபடியாக அரசை நடத்துவார்கள் என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.





