தமிழக வெற்றிக் கழகம் கட்சித்தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் மாவட்டம் வாரியாக உங்க விஜய் நான் வரேன் என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், இன்று மதியம் நாகை மாவட்டத்திலும் தொடர்ந்து இன்று மாலை திருவாரூரிலும் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது திருவாரூரில் நடந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட்டியது நான்தான் என்று மார் தட்டிக் கொண்டவரின் மகன் இப்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார். அவர் இப்போது என்ன செய்கிறார். நன்றாக ஓட வேண்டிய தமிழகம் என்ற தேரை நாலாப்பக்கமும் கட்டையை போட்டு ஆடாமல் அசையாமல் நகர விடாமல் அப்படியே நிறுத்திவிட்டார்.
இதை பெருமையாக வேறு சொல்லிக் கொள்கிறார். திருவாரூர் மாவட்டம் என் சொந்த மாவட்டம் என்று சொல்கிறார். ஆனால் திருவாரூர் கருவாடாக காய்கிறது. இதை அவர் கண்டுகொள்வதே இல்லை. உங்க அப்பா பெயரில் பேனா வைக்கறீங்க, எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பேரை வைக்கிறீங்க திருவாரூர் மாவட்டத்தில் ஒரு அடிப்படை சாலை வசதி கூட சரியாக இல்லை. அதிகமாக குடிசைப் பகுதியில் இருக்கும் ஊர் நாகை மட்டுமல்ல, திருவாரூரும் தான்.
இங்கே இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கு வைத்தியம் பார்க்கும் நிலைமை இருக்கிறது. அங்கு எல்லா கருவிகளும் வேலை செய்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். திருவாரூர் ஒரு மாவட்டத்துக்கு தலைநகர். ஆனால் இங்கு சாலை வசதிகள் கூட சரியாக இல்லை. இந்த மாவட்டத்துல ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் வேலை என்ன தெரியுமா? சிஎம் குடும்பத்துக்கு சேவை செய்வதுதான். அவருக்கு மக்கள்தான் முக்கியம் என்று நாம் புரிய வைக்கணும்.
டெல்டா விவசாயிகள் பல கொடுமைகளை அனுபவிக்கின்றனர். அவர்களிடம் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குகின்றனர். அரசு ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் தருகின்றனர். அத்துடன் ஒரு டன்னுக்கு 1000 ரூபாய் கமிஷன் வாங்குகின்றனர். 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குகின்றனர். இதை மற்றவர்கள் சொன்னால் நான் நம்ப மாட்டேன். ஆனால் சொன்னதே விவசாயிகள்தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள்.
இது உங்கள் ஆட்சியில் தான் நடந்திருக்கிறது முதல்வர் அவர்களே. உங்களுக்கு 40க்கு 40 என்றால் தேர்தல் முடிவு நினைவுக்கு வரும். டெல்டா விவசாயிகள் வயிற்றில் அடித்த 40 தான் எங்கள் நினைவுக்கு வரும். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? எங்களது கொள்கை ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம். ஊழல் இல்லாத தமிழகம். உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி. வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஜய் திருவாரூர் கூட்டத்தில் பேசினார்.





