தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
விக்கிரவாண்டியில் நடந்த தவெக அரசியல் முதல் மாநாட்டில் திமுக தான் என்னுடைய அரசியல் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்த விஜய், தொடர்ந்து திமுக அரசு குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்போது மக்களை ஏமாற்றுவதே திமுக அரசின் நோக்கமாக உள்ளது என்று குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே… என்ற பாடல் வரிகள் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.
தேர்தலின் போது போலி வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்கு இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.
அதில் மிக முக்கியமானது நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று பிரச்சாரம் செய்து தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.
ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுதான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா, எந்த பொய்யையும் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம் இனிவரும் காலங்களில் எடுபட போவதில்லை என்று நடிகர் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





