நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்தார். அதையடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
சென்னையை தொடர்ந்து கேரளாவில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் ஜெயிலர் 2 தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அங்கு படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். தொடர்ந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருக்கிறார்.
அடுத்த 2026ம் ஆண்டு ஜெயிலர் 2 படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. கூலி படம் அதற்கு முன்பாக வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார், அந்த படத்தை தயாரிப்பது யார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்விகளாக இருந்து வருகிறது.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக கூறப்பட்டது. இப்போது மற்றொரு முக்கிய இயக்குனரின் பெயரும் இதில் அடிபடுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சொந்த நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாராக உள்ளது.
ஏற்கனவே இதுகுறித்து நடிகர் ரஜினியுடன் பேசி சம்மதமும் பெற்று விட்ட நிலையில், விரைவில் முறைப்படி வேல்ஸ் பிலிம் நிறுவனம் மூலம் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதன்படி வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்த் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சி தான் ரஜினி படத்தை இயக்கப் போகிறார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தை 1997ம் ஆண்டில் டைரக்ட் செய்தவர் சுந்தர் சி. அருணாசலம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனத்துடன் சுந்தர் சி நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். அந்நிறுவன தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி டைரக்ட் செய்கிறார். அதனால் சுந்தர் சிக்கு வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மீண்டும் வாய்ப்பளிக்கிறது. மேலும் கேங்கர்ஸ் படம் மூலம் சுந்தர் சியுடன் வடிவேலு மீண்டும் இணைந்துள்ளதால் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் பட்சத்தில் வடிவேலுவுக்கு நிச்சயம் வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது.





