தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இப்போது அவர் தனது 69வது படம் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் இயக்கத்தை முழுமையாக கவனிக்க உள்ளார்.
வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வர் நாற்காலியில் அமர்வது என்ற லட்சியத்துடன் விஜய் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில் கட்சித் தலைவராக விஜய் அடிக்கடி பொது இடங்களுக்கு சென்று வருகிறார். மக்களையும் சந்திக்க துவங்கி இருக்கிறார்.
இந்நிலையில் மத்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு இனிமேல் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு கமாண்டோக்கள் மற்றும் மத்திய ரிசர்வ் படை அடங்கிய 11 பேர் அடங்கிய போலீஸ் குழு விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கும்.
நடிகர் விஜய் அவரது வீட்டில் இருக்கும் போதும், கட்சி அலுவலகத்துக்கு செல்லும் போதும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் மக்களை சந்திக்கும் இடங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று எங்கு விஜய் சென்றாலும் இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு படை அவரை சுற்றி வளைத்து பாதுகாப்பில் ஈடுபடும். அவரை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு போலீசார் உஷார் நிலையில் செயல்படுவர்.
முக்கிய தொழிலதிபர்கள் அரசியல் தலைவர்கள் பிரபல நடிகர்களின் பாதுகாப்பு கருதி எக்ஸ் ஒய் ஒய் பிளஸ் இசட் இசட் பிளஸ் போன்ற பிரிவுகளின் கீழ் மத்திய அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவராக உள்ள நடிகர் விஜய்க்கும் ஒய் பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி விஜய் வெளியில் செல்லும் போது அவரது காருக்கு பின்னாலும் முன்னாலும் இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு போலீசார் கான்வே செல்வார்கள். மத்திய ரிசர்வ் படை போலீசார் இந்த பாதுகாப்பில் ஈடுபடுவர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசாரின் கண்காணிப்பில் விஜய் இருப்பார். மிக விரைவில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.





