நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2023ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அறிவித்த அவர் இப்போது தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறார். வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் தவெக வருகை அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
தமிழக அரசியல் களத்தை பொருத்த வரை ஊடகங்கள் பங்களிப்பு மிக அவசியமானதாக உள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாக கட்சியினர் தனி விங்க் அமைத்து செயல்பட்டாலும் பெரும்பாலான மக்களுக்கு தொலைக்காட்சி தான் பிரதானமாக உள்ளது. ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தாத பாமர மக்கள் நடுத்தர மக்கள் டிவி சானல்களை பார்த்துதான் அரசியல் சமூக நிலவரங்களை அறிந்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் டிவி சேனல்கள் இருக்கின்றன. அதன்படி திமுக கட்சிக்கு சன் டிவி கலைஞர் சானல்கள் இருக்கின்றன. சன் நியூஸ் கலைஞர் செய்திகள் என தனியாக செய்தி சேனல்களும் திமுகவுக்கு இருக்கின்றன. அதே போல் அதிமுக கட்சிக்கு ஜெயா டிவி தேமுதிக வுக்கு கேப்டன் டிவி என தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கு என தனித்தனியாக ஆதரவு டிவி சானல்கள் இருந்து வருகின்றன.
இதுதவிர சில சானல்கள் சில கட்சிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட கட்சி சார்ந்த சேனல்களில் கட்சி சார்ந்த செய்திகளில் நடுநிலை இல்லாமல் ஆதரவு செய்திகளை மட்டுமே வெளியிடுவதும் வழக்கமாக உள்ளதால் அது கட்சியினர் மட்டுமே விரும்பும் சேனலாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வரும் நிலையில் அவரும் தனது கட்சிக்கு என தனியாக டிவி சேனல் ஒன்றை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு டிவிகே டிவி அல்லது வெற்றி டிவி அல்லது வேறு ஏதேனும் ஒரு பெயரில் டிவி சானல் துவங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய டிவி சேனல் முக்கிய பங்குதாரராக அதாவது சேனல் உருவாக்கம் நிர்வாகம் செயல்பாடு என மொத்த செலவையும் தவெக கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜூன் ஏற்க இருப்பதாகவும் இதற்கான செய்திப்பிரிவு துவங்க தேவையான ஏற்பாடுகள், அதற்கான அரசு அனுமதி உள்ளிட்ட பணிகளை அவர் மேற்பார்வையில் கட்சியின் ஊடகப்பிரிவினர் செய்து வருவதாகவும் ஒரு முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.





