தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடத்தி வரும் தலைவர் விஜய்க்கு, நடிகராக பெண் ரசிகைகள் மிகவும் அதிகம். அவரது ரசிகைகள் பெரும்பாலும் அவரை விஜய் அண்ணா என்று அழைப்பதுதான் வழக்கம். அதே போல் தனது ரசிகைகள் மற்றும் பெண்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் விஜய். தனது தங்கையின் மறைவுக்கு பிறகு தன் ரசிகைகளை தங்கையாக பார்ப்பதாக ஏற்கனவே விஜய் கூறியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் மாநாட்டில் தனது கொள்கை தலைவர்களாக 5 தலைவர்களை அறிவித்த விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோருடன் அஞ்சலை அம்மாள், வீரமங்ககை வேலு நாச்சியார் ஆகியோரை அறிவித்தார். பெண்களை கொள்கை தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தவெக என்றும் குறிப்பிட்டு அந்த மாநாட்டில் பேசியிருந்தார்.
இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம் முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது.
பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தினமும் நடப்பதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கிறது. பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க நீதித்துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.எனவே இதை செயல்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இதற்கு மதிப்பளித்து தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் என்று அந்த பதிவில் விஜய் கூறி இருக்கிறார். இதற்கு தமிழக அரசு செவி சாய்க்குமா, ஏதேனும் பதில் கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.





