தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இப்போது ஆளுங்கட்சி திமுகவுக்கு பெரிய போட்டியாக உருவாகி நிற்பது அதிமுகவோ பாஜகவோ நாம் தமிழர் கட்சியோ தேமுதிக கட்சிகளோ அல்ல. நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிதான். திமுக அதிமுக அல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். தமிழக அரசியலில் ஒரு மாறுதல் கண்டிப்பாக வேண்டும் என்று கருதுபவர்களின் ஆதரவு விஜய்க்கு என்பது உறுதியாகி விட்டது.
அதே நேரத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய்க்கு பக்கபலமாக இருப்பவர்கள் பெரிய அளவில் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. நடிகர் விஜய்க்கே இன்னும் அரசியல் அனுபவம் போதாது என்ற நிலையில், அவரால் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியுமா, நிர்வாக திறமை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில் சினிமா தயாரிப்பாளர் பிறகு நடிகர், அதன்பிறகு திமுக எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் இப்போது துணை முதல்வர் என அரசியல் களத்தில் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின், அடுத்தடுத்து ஆட்சி நிர்வாகத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறார். அவருக்கு என்ன அரசியல் அனுபவம் உள்ளது என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.
இப்போதைய அரசியல் களத்தில் திமுகவுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை காட்டி வருவது தவெக தலைவர் நடிகர் விஜய்தான். அதே நேரத்தில் அவரது கருத்துகள் அதிகளவில் மக்களை சென்றடைகிறது. அவரது கேள்விகளிலும் நியாயம் இருப்பதாக பலரும் ஆதரவு தருகின்றனர். அதே நேரத்தில் ஒரு காலத்தில் சினிமா நடிகராக இருந்த போது நடிகர் விஜய், திமுகவின் ஆதரவாளராக தான் இருந்திருக்கிறார். அது ஒரு வீடியோவில் பிரபலித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பட விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது, உதயநிதி தயாநிதி அருள்நிதி தமிழரசு கனிமொழி இந்த மாதிரி பெயர்களை கேட்கும்போதே இதெல்லாம் படத்துக்கு டைட்டிலா வைக்கலாமுன்னு எனக்கு தோணும். அந்தளவுக்கு ரொம்ப பவர்புஃல் ஆன பெயர்கள்.
இந்தியாவிலேயே பரம்பரை பரம்பரையா பெயர் சொல்லக்கூடிய ஒரு குடும்பம் என்றால் அது ஜவஹர்லால் நேரு அவர்களுடைய குடும்பம். அப்புறம் தமிழ்நாட்டில் பெயர் சொல்லக்கூடிய ஒரு குடும்பம் என்றால் அது நம்ம கலைஞரய்யா அவர்களுடைய குடும்பம்தான் என்று நடிகர் விஜய் அந்த விழாவில் மனதார பாராட்டி கருணாநிதி குடும்பம் குறித்து பேசியிருக்கிறார். அப்படி பேசிய நடிகர் விஜய், இன்று அரசியல்வாதியாக திமுகவை விளாசித் தள்ளி வருகிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





