தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். துவக்கத்தில் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த அவரை, இயக்குனர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமாக்கினார்.
பிறகு பீட்சா சூது கவ்வும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பண்ணையாரும் பத்மினியும் ரம்மி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வெண்ணிலா கபடிக்குழு சுந்தரபாண்டியன் புதுப்பேட்டை போன்ற சில படங்களிலும் விஜய் சேதுபதி சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது முடிவானது. ஏனென்றால் விஜய் சேதுபதி வளர்ந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக ஒரு படத்தில் நடித்துவரும் விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் ஜனவரி 16ம் தேதி அவரது பிறந்த நாளை தொடர்ந்து 18ம் தேதி, பாலாஜி தரணிதரன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.
இந்த சூழலில், தனது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த மற்றொரு இயக்குனர் படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி உள்ளது. நடிகர் சசிக்குமார், லட்சுமிமேனன், சூரி, அப்புக்குட்டி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் சுந்தரபாண்டியன். எஸ்ஆர் பிரபாகரன் இயக்கிய இந்த படத்தில் லட்சுமிமேனனின் முறைப் பையனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார்.
ஒரு கட்டத்தில் லட்சுமிமேனனை திருமணம் செய்துக்கொள்ளப் போகும் ஹீரோ சசிக்குமாரை கொலை செய்யவும் கூலிப்படையை ஏற்பாடு செய்யும் வில்லனாக அந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த வகையில் அந்த படத்தின் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கதை கேட்ட விஜய் சேதுபதி ஓகே சொல்லி விட்டார். 7ஜி பிலிம்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.





