ஹீரோ நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி சில நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் பிரதான வில்லனாகவும் நடித்திருக்கிறார். குறிப்பாக ரஜினியுடன் பேட்ட கமலுடன் விக்ரம் விஜயுடன் மாஸ்டர் இந்தி நடிகர் ஷாருக்கானுடன் ஜவான் போன்ற படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படங்கள் பெரிய வெற்றி படங்களாகவும் இருந்து அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பத்தா என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சீதக்காதி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் டைரக்ட் செய்து இருக்கிறார். மூன்றாவது படமாக நடிகர் விஜய் சேதுபதி பாலாஜி தரணிதரன் கூட்டணியில் பத்தா படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். இந்த படத்துக்கு சாய் அபயங்கள் இசையமைத்துள்ளார். இயக்குனர் அட்லி இந்த படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, நான் வியந்து வியந்து பார்க்கும் மனிதர் ரஜினிகாந்த் சார் தான். சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு காட்சியில் நடிக்க சென்று இருந்தேன். அப்போது நானும் அவரும் பேசுவது போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அப்போது டைரக்டர் நெல்சன் வெத்தலை பாக்கு கிராம்பு போன்றவற்றை எல்லாம் தந்து தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
ரஜினி சாருக்கு இருக்கும் அனுபவத்திற்கு அவர் இதனை ஒத்திகை செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை செய்து பார்க்கிறார். நான் பேசும்போது எவ்வளவு தூரம் போகிறது? அதற்கான நேர அளவுக்கு வெற்றிலை பாக்கு எல்லாம் எடுத்து போட்டு நேரத்தை ஒப்பிடுகிறார். இதனை ஐந்து ஆறு முறை அவர் செய்து பார்க்கிறார்.
நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது எல்லாமே நான் சாகும் வரை நடிகராக இருந்தால் ரஜினிகாந்த் சார் போல் இருக்க வேண்டும். அவர் வேலையில் அவ்வளவு முனைப்புடன் இருக்கிறார். இப்போதும் சினிமாவை அவ்வளவு நேசிக்கிறார் என்று நடிகர் விஜய் சேதுபதி பத்தா பட விழாவில் சூப்பர் ஸ்டாரை பாராட்டிப் பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





