நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த படத்தில் நடிகர் விஜயுடன் மமிதா பைஜூ பூஜா ஹெக்டே கௌதம் மேனன் பிரியாமணி பாபி தியோல் நரேன் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்து இருந்தார். ஆனால் இந்த படம் சென்சார் பிரச்னை காரணமாக இன்னும் திரைக்கு வரவில்லை.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் இந்த படம் வெளியாகி விட்டது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி என்ற பகுதியில் லோக்கல் ஆபரேட்டர் ஒருவர் கேபிள் டிவியில் இந்த படத்தை ஒளிபரப்பும் செய்து விட்டார். ஆனால் இந்த சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் நடிகர் விஜய் தமிழக முதல்வரான நிலையில் விரைவில் ஜனநாயகன் படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இதுவரை அதிகாரபூர்வமாக ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரவில்லை. விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 22ல் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதையடுத்து படத்தின் இயக்குனர் எச் வினோத் தனது பாதி சம்பளத்தை விட்டு தந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர் இயக்குனர் எச் வினோத்.
ஆடம்பரங்களை விரும்பாத ஒரு எளிய மனிதர். ஜனநாயகன் படத்துக்கு அவர் இயக்குனராக பணிசெய்ய ரூ. 12 கோடி சம்பளம் பேசிய நிலையில் அட்வான்ஸ் படப்பிடிப்பு காலங்களில் ரூ. 6 கோடி வரை அவருக்கு தரப்பட்டுள்ளது. இப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீதி தர வேண்டிய ரூ. 6 கோடியை தனக்கு வேண்டாம் என்று அவர் மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.





