நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சி திமுக குறித்து தொடர் கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார். குறிப்பாக திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் குறித்து வெளிப்படையாக கடும் சர்ச்சையாக பேசி வருகிறார். எப்படியும் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு தவெக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் விஜய் மேடைகளில் சவால் விட்டு வருகிறார்.
இன்று தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, திமுக தலைவர் அவரது தந்தைக்கு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அப்போது உச்சநீதிமன்றம் என்ன சொன்னது? யாருக்கு புகழ் பாட பார்க்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டது. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க என்பதுதான் அதன் பொருள்.
மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிதிச்சுமை என்று சொல்கிறீர்கள். சிலை வைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது? கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் தருவதாக சொன்னீர்களே, அது என்ன ஆனது? கரும்புக்கு ஆதார விலையாக 4000 ரூபாய் தருவதாக சொன்னீர்களே, அது என்ன ஆனது? நீண்ட நாட்களாக திருமணமே ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை தருவதாக சொன்னீர்களே, அது என்ன ஆனது?
மாநில அரசால் முடியவே முடியாது என தெரிந்திருந்தும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என்று சொன்னீர்கள். இது எவ்வளவு பெரிய மோசடி. இது பற்றியெல்லாம் நாம் கேட்டால் நாங்கள்தான் முன்மாதிரி ஆட்சி என்று சொல்வார்கள். இது முன்மாதிரி ஆட்சி அல்ல. மோசடி ஆட்சி. மோசமானவர்களில் முக்கியமானவர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி மோசடி ஆட்சிகளில் மிக முக்கியமான ஆட்சி திமுக ஆட்சிதான்.
கரூர் சம்பவம் முதல் ஜனநாயகம் படம் வரை என்மீது பழி போட்டார்கள். ஆனால் ஜனநாயகன் படம் தொடர்பாக பலர் குரல் கொடுத்தார்கள். குறிப்பாக அதில் பூசி மெழுகி பட்டும் படாமல் குரல் கொடுத்த முதல்வருக்கு நன்றி. மற்ற அனைவருக்கும் நன்றி. மீனவர்கள் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்று விடுவார்.
அடுத்த முறையும் நான்தான் முதல்வர் என்று ஸ்டாலின் சொல்கிறார். அது நடக்க வாய்ப்பே இல்லை. திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரவே முடியாது. ஸ்டாலின் சொல்வது நடக்க வாய்ப்பே இல்லை. அவரது தந்தையாலேயே அது முடியவில்லை. அவரது மகனால் அது முடியவே முடியாது என்று நடிகர் விஜய் இன்றைய கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.





