சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளி வேலை பார்த்து வந்தவர் அஜீத்குமார். 27 வயது இளைஞர். சில தினங்களுக்கு முன் அந்த கோவிலுக்கு காரில் வந்த மதுரை திருநகரை சேர்ந்த சிவகாமி என்ற பெண்மணி, செக்யூரிட்டி அஜீத்குமாரிடம் கார் சாவியை கொடுத்து பார்க்கிங் செய்ய சொல்லி இருக்கிறார்.
ஆனால் அஜீத்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது. அதனால் அருகில் இருந்த ஒரு நபரிடம் கார் சாவியை கொடுத்து, காரை பார்க்கிங் செய்யுமாறு கூறியிருக்கிறார். அதன்பிறகு கோவிலுக்குள் சென்ற சிவகாமி, காரில் வைத்திருந்த நகைகளை காணவில்லை என திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செக்யூரிட்டி அஜீத்குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். மேலும் அவரை ஸ்டேஷனில் கைகளை கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பிறகு அங்குள்ள ஒரு தோப்புக்குள் கூட்டிச் சென்றும் அந்த இளைஞரை போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
அதன்பிறகு அஜீத்குமாரின் தம்பி நவீன் என்பவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி பின்னர் விடுவித்துள்ளனர். இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அஜீத்குமார், மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியிருக்கின்றனர்.
காரில் இருந்த நகைகளை நான் திருடவில்லை என்று பலமுறை போலீசாரிடம் கூறியும் அவர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் கோவில் செக்யூரிட்டியை அடித்தே கொன்றுவிட்டனர். இதையடுத்து அஜீத்குமாரை அடித்து துன்புறுத்திய போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த அஜீத்குமாரின் தம்பி நவீனுக்கு அரசு பணி நியமன உத்தரவு, இலவச வீட்டு மனை பட்டா போன்றவை அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த செக்யூரிட்டி அஜீத்குமார் வீட்டுக்கு நேற்று நேரில் சென்றார். அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அந்த குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தவெக அறிவித்துள்ளது.





