சினிமா நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருந்த நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக அசத்திக்கொண்டு இருக்கிறார். இதுவரை விக்கிரவாண்டி மதுரை என 2 மாநில அரசியல் மாநாடுகளை வெற்றிக்கரமாக அவர் நடத்தி முடித்திருக்கிறார்.
தொடர்ந்து இப்போது மக்கள் சந்திப்பு பயணத்தை அவர் துவங்கியிருக்கிறார். கடந்த 13ம் தேதி திருச்சி அரியலூரில் முதல் நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர் வருகிற 20ம் தேதி நாகப்பட்டிணம் திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
வருகிற டிசம்பர் 20ம் தேதி வரை தொடர்ந்து 4 மாதங்களுக்கு அவரது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025 குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து தீர்ப்பு வழங்கியிருப்பது இஸ்லாமிய மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று, முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் தீர்ப்பின் வாயிலாக நமது இஸ்லாமியச் சொந்தங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்சநீதிமன்றம். அரசியலமைப்பின் மாண்பைக் காக்கும் வகையிலும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீதி, சமத்துவம் மற்றும் மதச் சுதந்திரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் விதிகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது.
இது இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்களின் குரலாக ஒலித்த தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கும் இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும். இந்த வெற்றியை அடைவதற்காகத் தங்களின் அளப்பரிய பங்களிப்பை அளித்த நம் சட்ட வல்லுனர் குழுவிற்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.





