தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தர் பெயரில் பல சொந்த படங்களை தயாரித்தவர். குறிப்பாக புதுமுக இயக்குனர்களுக்கு, திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்பளித்தவர்.
சினிமாவில் கொடி கட்டிப் பறந்த நடிகர் விஜயகாந்த் மற்றவர்களுக்கு உதவும் தாராள மனம் கொண்டவர். வாய்ப்பு தேடி அலைந்த உதவி இயக்குனர்களுக்கு லாட்ஜ் ஒன்றில் 3 வேளையும் தினசரி உணவு கிடைக்க ஏற்பாடு செய்தவர். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஒரு வெற்றி தலைவராக அவர் பவனி வந்தவர்.
விஜயகாந்தை பொருத்த வரை கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்டார். அதற்கு காரணம் அவரது வாரி வழங்கும் வள்ளல் குணம்தான். உதவி என்று வந்த யாருக்கும் அவர் உதவாமல் இருந்தது இல்லை. சினிமா நடிகராக அரசியல் தலைவராக விஜயகாந்த் ஒரு பண்பாளராக வாழ்ந்து மறைந்தவர். தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி, அரசியல் களத்தில் பெரிய வரவேற்பை பெற்றவர்.
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு இப்போது அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்துகிறார். மூத்த மகன் விஜய பிரபாகன் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். பிரமேலதாவின் சகோதரர் எல்கே சுதீஷ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டப் பேரவை செயலகத்தில் தனது குடும்பத்துக்கு பென்சன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். தனது கணவர் விஜயகாந்த் மறைவை குறிப்பிட்டு, மறைந்த எம்எல்ஏ மனைவி என்ற முறையில், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் ரூ. 15 ஆயிரம் வழங்க கோரி அவர் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் உண்மையா, அல்லது உருட்டா என்று தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் தேமுதிக கட்சியினர் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விஜயகாந்த் கொடை வள்ளல் ஆக மற்றவர்களுக்கு உதவியவர். அவரது வசதிமிக்க குடும்பத்துக்கு அரசு மாதந்தோறும் வழங்கும் ரூ. 15 ஆயிரம் பென்சன் என்பது தேவையற்றது. ஆனால் இது உண்மையா, பொய்யா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.





