தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையும் மிக உன்னிப்பாக ஊடகங்களாலும் ரசிகர்களாலும் அரசியல் கட்சிகளாலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அவர் வீட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் வீடு வந்து சேரும் வரை அவரை காமிராவின் கண்கள் பின்தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் எம்ஜிஆர் ரஜினிகாந்துக்கு பிறகு மக்களின் மத்தியில் அதிக கவனம் பெற்ற ஒருவராக நடிகர் விஜய் மாறியிருக்கிறார். அதே நேரத்தில் மிகவும் கடுமையான மோசமான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் அவர் சந்தித்து வருகிறார் என்பதும் உண்மையாக உள்ளது.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டில் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் வரும் ஏப்ரல் 20ம் தேதி இதுகுறித்த விசாரணை, இதற்கிடையே நடிகை திரிஷாவுக்கும் விஜய்க்கும் உள்ள நெருக்கமான நட்பு கூட்டணியே இல்லாமல் தேர்தலை சந்திக்கும் சவால் என விஜய் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் மும்பைக்கு தனி விமானம் மூலம் செல்லும் தகவல் ஊடகங்களில் வெளியானது. ஜனநாயகன் படம் மும்பையில் சென்சார் செய்யப்பட்டதால் அதற்காக இந்த பயணத்தை விஜய் மேற்கொண்டதாக ஒரு தகவல் பரவியது. சென்சார் குழு அதிகாரிகளை அவர் சந்திக்க போவதாகவும் கூறப்பட்டது.
அதே நேரத்தில் மும்பையில் ஜனநாயகன் படத்தில் சில காட்சிகள் மீண்டும் ரி ஷூட் செய்யப்படுகின்றன. அதற்காக விஜய் புறப்பட்டுச் செல்கிறார் என்றும் ஒரு தரப்பில் தகவல் பரவியது. ஆனால் உண்மையில் விஜய் அப்படி எதற்காகவும் போகவில்லை என்பதை அடுத்த சில மணி நேரங்களில் வெளியான புகைப்படங்கள் வீடியோக்கள் தெளிவுபடுத்தியது.
விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. அவரது மனைவி பிரியா கர்ப்பமாக உள்ள நிலையில் நேற்று மும்பையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்பதற்காக தான் விஜய் மும்பைக்கு சென்றிருக்கிறார். அங்கு அட்லி பிரியா தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இப்போது அட்லி அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு புதிய படத்தை பெரிய பட்ஜெட்டில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.





