நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்ற பெருமையும் கொண்டவர். பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி படத்தில் நாயகனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். கும்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வரும் நிலையில் பெரிய அளவில் வெற்றிப் படம் எதுவும் அவர் இதுவரை தரவில்லை.
இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு போலீஸ் கேரக்டரில் நடித்த சிறை படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் குறிதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விக்ரம் பிரபு கூறியதாவது, நான் இதுவரை நடித்த படங்களில் அதிகமாக போலீஸ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறேன். எனது தோற்றத்தை மனதில் வைத்து அப்படியான கேரக்டர்களில் வைத்து என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள்.
நான் இப்போது நடித்துள்ள சிறை படம் எனக்கு 25வது படம். ஆனால் தாத்தாவும் அப்பாவும் தங்களது முதல் 25 படங்களில் சாதித்த அளவுக்கு நான் எதையும் சினிமாவில் இதுவரை சாதிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த படங்கள் வெற்றியோ தோல்வியோ என்றாலும் அவை நல்ல படங்கள் என்பதில் எனக்கு திருப்தியாக உள்ளது.
இனி போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த போது வந்த கதைதான் சிறை. டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இந்த கதை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை. ஆனால் டாணாக்காரன் படத்தில் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்தது போலவே இந்த படத்தின் கேரக்டருக்கு உயிர் கொடுக்க உங்களால் தான் முடியும் என்று சொன்னதால் சிறை படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்
டாணாக்காரன் படத்தில் பயிற்சி போலீஸ் என்பதால் எடையை குறைத்து நடித்தேன். சிறை படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் என்பதால் எடையை அதிகரித்து நடித்து இருக்கிறேன். தெலுங்கில் நடித்த காட்டி படம் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அந்த படத்துக்கு நானே டப்பிங் பேசி நடித்தேன்.
நடிகை அனுஷ்கா நல்ல தோழியாக அமைந்தார். அவரது இரக்க குணத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் எனக்கு வருகிறது. நல்ல கதைகளாக தேர்வு செய்து நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இதுவரை 25 படங்களில் நடித்து விட்டேன். அடுத்து வரும் 25 படங்களில் ஏதாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியிருக்கிறார்.





