தர்பார் அண்ணாத்த லால் சலாம் என தொடர்ந்து மொக்கை படங்களாக இருந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படம்தான் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் டைரக்ட் செய்திருந்தார். ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி மிர்ணா மேனன் சரவணன் சுனில் ரெடின் கிங்ஸ்லி அறந்தாங்கி நிஷா விடிவி கணேஷ் என பலர் படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசை பெரிய பக்கபலமாக இருந்தது. மேலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் ஜாக்கி ஷெராப் மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் சில காட்சிகளில் நடித்திருந்தனர். குறிப்பாக நடிகை தமன்னா காவலய்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் தான்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விநாயகன் ஜெயிலர் படத்தில் வருமன் வில்லன் கேரக்டரில் அதகளம் செய்து பெரிய வரவேற்பை பெற்றார். இவர் திமிரு சிலம்பாட்டம் போன்ற சில தமிழ் படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், ரஜினிக்கு வில்லனாக வருமன் கேரக்டரில் அவர் நடித்த ஜெயிலர் படம் தான் அவருக்கு நல்ல அடையாளமாக இருந்தது.
ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்காக ரஜினி அனிருத் நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை வழங்கிய படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நிச்சயமாக விநாயகனுக்கும் ஒரு காரை பரிசாக வழங்கி இருக்க வேண்டும் என்று அப்போதே ரசிகர்கள் கூறியிருந்தனர். ஜெயிலர் 2 படத்திலும் சில பிளாஷ்பேக் காட்சிகளில் விநாயகன் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் மலையாளத்தில் விநாயகன், நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த களம்காவல் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் விநாயகன் தற்போது இயக்குனர் மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் ஆடு 3 என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது.
அந்த சண்டை காட்சியில் நடித்த போது நடிகர் விநாயகனின் தோள்பட்டை எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் 6 வாரங்கள் வரை விநாயகன் ஓய்வெடுக்க வேண்டும் என்று கண்டிஷனாக கூறிவிட்டனர். இனி அவர் 6 வாரங்களுக்கு பிறகுதான் ஷூட்டிங் போக வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.





