இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து அஞ்சாதே நந்தலாலா துப்பறிவாளன் சைக்கோ போன்ற பல வெற்றிப் படங்களை தந்தவர். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் என்ற படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது.
இயக்குனராக மட்டுமின்றி நந்தலாலா சவரக்கத்தி லியோ மாவீரன் வணங்கான் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் மிஷ்கின். சமீபத்தில் பாட்டல் ராதா என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இயக்குனர்கள் வெற்றிமாறன் பா ரஞ்சித் அமீர் லிங்குசாமி இருந்த அந்த விழா மேடையில், இயக்குனர் மிஷ்கின் பேசும்போது இளையராஜாவை மரியாதையின்றி ஒருமையில் குறிப்பிட்டு பேசினார். மேலும் சில கெட்ட வார்த்தைகளை பலமுறை பேச்சுக்கு இடையே அவர் பேசிக்கொண்டே இருந்தார்.
இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேடை நாகரிகம் இல்லாமல் பெண்கள் இருந்த அந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் இப்படி ஆபாச வார்த்தைகளை பேசிய கண்டிக்கத்தக்கது என நடிகர் அருள்தாஸ் கவிஞர் தாமரை தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், தவறான வார்த்தைகளை பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் மிஷ்கின் குறித்து நடிகர் விஷால் விமர்சித்துள்ளார். துப்பறிவாளன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மிஷ்கின், விஷால் கூட்டணியில் துப்பறிவாளன் 2 படம் உருவாக இருந்தது. அப்போது ஏற்பட்ட பஞ்சாயத்தில் ஏற்கனவே நடிகர் விஷால், இயக்குனர் மிஷ்கின் இடையே மோதல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் இயக்குனர் மிஷ்கின் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது, மிஷ்கினுக்கு பேசிட்டு மன்னிப்பு கேக்கிறதே வேலையா போச்சு. மேடை நாகரிகம் என்று ஒன்று இருக்கு. சில பேரோட சுபாவத்தை மாற்ற முடியாது. நீங்க தண்ணி அடிங்க யாரை வேணா திட்டுங்க. ஆனா இளையராஜாவை அவன் இவன்னு பேசுறதுக்கு யாருக்கும் அருகதை கிடையாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்களும் தான் கூத்து பட்டறையிலிருந்து வந்தவங்க தான். நாங்களெல்லாம் கெட்ட வார்த்தையா பேசிட்டு இருக்கோம் என்று விஷால் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.





