தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தனது எக்ஸ் பதிவில் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து சில கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்.
நடிகர் விஷால் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். அவரை எப்போதுமே தளபதி என்று அழைக்க தான் எனக்கு பிடிக்கும். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அவர் பதவியேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் திரையுலகை சேர்ந்த ஒரு ஆளுமை மாநிலத்தை வழிநடத்துவதை கண்டு பெருமிதம் கொள்கிறேன். வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். இது நம் மாநிலத்தின் பொற்காலமாக அமையட்டும். அன்புள்ள முதல்வர் விஜய் சார். கடந்த 32 ஆண்டுகளாக எனக்கு தெரிந்த ஒரு நபரை இன்று சார் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஒரு வாக்காளனாக உங்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன். முதலமைச்சர் தனது வீட்டிலிருந்து செல்லும்போது வீணாக வெயிலில் நின்று கொண்டிருக்கும் பெண் காவலர்களின் நிலையை நீங்கள் கவனிப்பீர்கள் என நம்புகிறேன்.
அவர்களுக்கு மொபைல் டாய்லெட் வசதிகளை செய்து தர வேண்டுகிறேன். நிச்சயமாக நிறைவேற்ற வேண்டிய பல வாக்குறுதிகள் உள்ளன.அதே சமயம் கடந்த 30 ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் சாலைகளின் நிலை மழை நீர் தேங்குதல் இன்னும் பயன்பாட்டுக்கு வராத மழைநீர் வடிகால் வசதிகள் போன்ற அடிப்படை பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என ஒரு சராசரி மனிதனாக கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை எந்த தலைவரும் செய்யாத சில மாற்றங்களை நீங்கள் முன்னெடுத்தால் அது மிகப்பெரிய அடையாளமாக மாறும் என்று நடிகர் விஷால் தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் இன்று நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் சங்கம் போன்றவற்றுக்கு அரசு தரப்பில் முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.





