விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகள் மிக பிரபலமாக மாறுவதற்கு காரணம், அந்த நிகழ்ச்சியை மிக பிரமாதமாக வழங்கும் தொகுப்பாளர்கள்தான். குறிப்பாக நீயா நானா கோபிநாத், அது இது எது மாகாப, அதற்கு முன்பு சிவகார்த்திகேயன், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை வழங்கும் பிரியங்கா என தொகுப்பாளர்களின் திறமை, பேச்சாற்றலும், காமெடியான பேச்சும் அந்த நிகழ்ச்சிக்கு பலம் சேர்க்கிறது.
இதே போல் விஜய் டிவியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 2017ம் ஆண்டு துவங்கி, 2023ம் ஆண்டு வரை 7 பிக்பாஸ் சீசன் நடந்து முடிந்துள்ளன. இன்னும் சில வாரங்களில் பிக்பாஸ் 8 சீசன் துவங்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க வேண்டிய போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்து வருகிறது.
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை, 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை கடந்த 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன்தான் நடத்தி வருகிறார். அக்டோபர் முதல் ஜனவரி வரை ஏறக்குறைய 4 மாதங்களுக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் சனி, ஞாயிறு தினங்களில் கமல் பங்கேற்று, பஞ்சாயத்து செய்வார். அந்த வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து நேரடி விசாரணை நடத்துவார்.
துவக்கத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்திய போது, கமல் மீது போட்டியாளர்கள் மிகுந்த மரியாதை, மதிப்பு தந்து நடந்துக்கொண்டனர். கமல் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாமல் அவர் சொன்னதை கேட்டு நடந்துக்கொண்டனர். ஆனால் கடந்த 7வது சீசனில், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்கள் கமல்ஹாசனையும் விமர்சிக்கும் அளவுக்கு வந்துவிட்டனர்.
அதுமட்டுமின்றி, பெண்களின் பாதுகாப்பு என்கிற விஷயத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட பிரதீப் என்பவர், பிக்பாஸ் வீட்டை விட்டு ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நிக்ஸன் என்பவர், அர்ச்சனா என்ற போட்டியாளரை சொருகிடுவேன் என்று சொல்லியும் அவரை கமல் வெறுமனே கண்டித்தாரே தவிர, வீட்டை விட்டு வெளியேற்றவில்லை.
அதனால் இந்த முறை நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நான் நடத்தவில்லை என்று விஜய் டிவி நிர்வாகத்திடம் நேரடியாக சொல்லிவிட்டதாக தெரிகிறது. மேலும் தக்லைப், இந்தியன் 3, கல்கி 2 படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். எனினும் கமல் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியம் இருக்காது என்பதால், அவரை எப்படியும் சம்மதிக்க வைக்க விஜய் டிவி நிர்வாகமும், பிக்பாஸ் தயாரிப்பாளர்களும் முயற்சித்து வருகின்றனர். அப்படி கமல் வராவிட்டால், பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் நடத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.





