தமிழ் சினிமா ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத சிறந்த நடிகர்களில் ஒருவர் விசு. குடும்ப படங்கள் என்றாலே அதில் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகர் விசுதான். அவர் இயக்கி நடித்த குடும்ப படங்களை இப்போதும் ரசிகர்கள் கொண்டாட காரணங்கள், குடும்ப சிக்கல்களை அருமையான சொன்ன படங்களாக அவை இருக்கின்றன.
சம்சாரம் அது மின்சாரம் குடும்பம் ஒரு கதம்பம் மணல் கயிறு பெண்மணி அவள் கண்மணி வரவு நல்ல உறவு சகலகலா சம்மந்தி டௌரி கல்யாணம் வேடிக்கை என் வாடிக்கை திருமதி ஒரு வெகுமதி சிதம்பர ரகசியம் சிகாமணி ரமாமணி என விசு நடித்த இயக்கிய பல படங்கள் குடும்ப சித்திரங்களாக ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவை.
சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரம்பா ஜெய்சங்கர் மனோரமா ரவிச்சந்திரன் ரகுவரன் கிட்டி விகே ராமசாமி உள்ளிட்டோர் நடித்த படம் அருணாசலம். படத்துக்கு கதை வசனம் எழுதிய கிரேஸி மோகன், கமலின் நெருங்கிய நண்பர். இந்த படத்தில் அப்பா ரஜினி விட்டுச் சென்ற 3 ஆயிரம் கோடியை பாதுகாத்து, அவர் மகன் ரஜினியிடம் ஒப்படைக்கும் டிரஸ்டியாக விசு நடித்திருந்தார். ஆனால் மகன் ரஜினி யார் என்ற விசுவுக்கே தெரியாது.
இதுகுறித்து மறைந்த நடிகர் விசு, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஐதராபாத்தில் அருணாசலம் ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதில் நான் போய் ஜாயிண்ட் பண்ணிட்டேன். அப்போது ரஜினி முன்னிலையில் கதை வசனகர்த்தா கிரேஸி மோகன் என்னிடம் படத்தின் கதை சொன்னார். அப்போது அவர், விசு படத்தின் கதைப்படி நீ ஒரு கேணை என்று என்னை கடுமையாக விமர்சித்தார்.
உடனே ரஜினி அரண்டு போய்விட்டார். மோகன், அவர் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். இப்படி சொல்றீங்களே என்றார். இப்போ அவரையே கேணை என்று ஒத்துக்க வைக்கட்டா என்று கேட்ட கிரேஸி மோகன், என்னுடைய கேரக்டரை சொன்னார். படத்தின் கதைப்படி செத்துப் போன அப்பாவோட 3 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை, அவரது மகனிடம் ஒப்படைக்கணும். ஆனா மகன் யாருன்னு தெரியாது. ஆனா அந்த டிரஸ்ட்டில இருக்கிற மத்த 4 பேர் இந்த 3 ஆயிரம் கோடியை ஆட்டைய போட பார்க்கறாங்க.
இந்த சூழ்நிலையில் அந்த பையனை தேடி 3 ஆயிரம் கோடியை ஒருத்தன் ஒப்படைக்க போனான்னா அவர் கேணையா, இல்லையா என்று கேட்க, நான் கேணை தான் என்று ஒத்துக்கொண்டேன். ஏனென்றால் 3 ஆயிரம் கோடியை பங்கு போட்டால் 600 கோடி ரூபாய் வரும். அதை வாங்கிட்டு செட்டில் ஆகாமல், சின்ன ரஜினியை தேடிப் போனால் அவன் கேணை என்பது உண்மைதான் என்றேன். பார்த்துக்கீட்டீங்களா, விசுவே ஒத்துண்டுட்டார் என கிரேஸி மோகன் என்னை கலாய்த்தார் என்று விசு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





