நடிகர் யோகிபாபு, துவக்கத்தில் துணை நடிகர்களில் ஒருவராக படங்களில் தெரிந்தவர். பிறகு காக்கா முட்டை படத்தில், எனக்கு விபூதி அடிச்சே இல்லே நீ? என்ற டயலாக் பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் காமெடி ரோலில் நடித்து முன்னணி காமெடியனாக மாறினார்.
குறிப்பாக கோலமாவு கோகிலா, கலகலப்பு 2, டாக்டர், ரெமோ போன்ற படங்களில் யோகிபாபு காமெடி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி நடிப்பில் மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பிலும் யோகிபாபு அசத்திய படம், நெல்சன் மண்டேலா. இந்த படத்தில் மரத்தடி சலூன்கடைக்காரராக அசத்தலான நடிப்பை தந்திருப்பார்.
இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் போட் என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் மட்டுமின்றி தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி யோகி பாபு பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர்கள் சூரி, சந்தானம் ஆகியோர் காமெடி நடிப்பில் இருந்து விலகி ஹீரோ நடிகர்களாக மாறிவிட்டனர். சந்தானம் காமெடி நடிப்பில் இருந்து ஹீரோவாக முதலில் மாறினார். தொடர்ந்து சூரியும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிவிட்டார். இப்போது கருடன் படமும் பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்துள்ள நிலையில், கொட்டுக்காளி, விடுதலை 2 படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன.
இப்போது காமெடி நடிகராக இருந்த சூரியும், யோகிபாபுவும் ஹீரோக்களாக நடிக்க துவங்கி விட்ட நிலையில், இருவருக்கும் நடிப்பில் போட்டி நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் சூரி கதாநாயகனாகிய நிலையில், சந்தானத்துக்கு தான் அவர் போட்டியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது யோகிபாபுவுக்கும் சூரி போட்டியாளராக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகர் யோகிபாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர் யோகிபாபு, அப்படி எல்லாம் இல்லை. எங்களது வளர்ச்சியை நாங்கள் ஆரோக்கியமாக தான் பார்க்கிறோம். ஒரு காலத்தில் அடுத்தவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டவர்கள் நாங்கள். அதனால் மற்றவர்களின் வளர்ச்சியை, சிறப்பான கண்ணோட்டத்துடன்தான் பார்ப்போம். இப்படி சூரிக்கும், எனக்கும் போட்டி என்பது டீக்கடையில் பொழுதுபோக பேசப்படும் பேச்சு, சூரிக்கும் சேர்த்து நான் கோவிலில் அர்ச்சனை செய்தேன், என்று பேசியிருக்கிறார் நடிகர் யோகிபாபு.





