நடிகர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதித்த நிலையில் வீட்டில் ஓய்வில் இருந்த அவர், அடிக்கடி உடல்நல பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக பணிசெய்தவர். நடிகர் சங்க கடன்களை அடைப்பதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் நட்சத்திர கலை இரவுகளை நடத்தி, அதன்மூலம் வந்த வருமானத்தில் நடிகர் சங்க கடன்களை அடைத்தவர்.
மற்ற நடிகர்களை காட்டிலும் விஜயகாந்த் துணிச்சலானவர். எந்த பிரச்னை என்றாலும் அவரிடம் சென்றால் நிச்சயம் அதற்கு தீர்வு கிடைக்கும். உதவி கேட்டு சென்றவர்களையும், பிரச்னை என்று வந்தவர்களையும் முடியாது என திருப்பிய அனுப்பிய வழக்கம் என்றுமே கேப்டனிடம் இருந்தது இல்லை.
இந்நிலையில், அவர் இந்த மண்ணை விட்டு மறைந்த அந்த துக்க நிகழ்வு தமிழ்நாட்டு மக்களையே வேதனையில் ஆழ்த்தியது. ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக, முக்கிய நடிகர்களாக உள்ள பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை. இந்நிலையில் சிவக்குமார், கார்த்தி, அருண்விஜய் போன்றவர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து நின்று உருகி, கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ப்ளுசட்டை மாறன், அவரோட சமாதிக்கு சாவகாசமாக வந்து இப்படி பெர்பாமென்ஸ் பண்றதை ஊர் நம்பாது. இனி அடுத்து யார் வர்றாங்கன்னு பார்ப்போம் என்று கலாய்த்து பதிவிட்டுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட வெளிநாடு சென்ற விஷால், தனுஷ், சிம்பு போன்றவர்கள், உண்மையான அக்கறை இருந்திருந்தால் அடுத்த சில மணி நேரங்களில், விமானம் பிடித்து சென்னை வந்திருக்க முடியும். விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்க முடியும். சாவகாசமாக வந்து இப்போது, விஜயகாந்த் நினைவிடத்தில் புகழ் பாடுவது, கண்ணீர் விடுவது எல்லாமே அப்பட்டமாக நடிப்பாக தெரிவதை தான் ப்ளூ சட்டை மாறன் விளாசி தள்ளியிருக்கிறார்.





