இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்க்கு வாரிசு மற்றும் அஜித்திற்கு துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே சுமாரான விமர்சனத்தையே பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பின. அஜித்திற்கு இளைஞர்கள் பட்டாளம் திரண்டார்கள் என்றால், விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் ஏராளமானோர் சென்றனர்.
அடுத்ததாக இந்த ஆண்டில் மிகப்பெரிய நட்சத்திரத்தின் திரைப்படமாக வெளியானது ஜெயிலர்தான். ரஜினிகாந்த் நடிப்பில், சிவராஜ்குமார், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன் தமன்னா வசந்த் ரவி யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனால் வசூலில் கொடிகட்டி பறந்தது ஜெயிலர் திரைப்படம். கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் ஈட்டியது.
அதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. சென்ற வருடம் தனுஷிற்கு திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் நானே வருவேன் படம் தோல்வியடைந்தது.
இப்படியான சூழலில் இந்த வருடத்தில் வாத்தி திரைப்படம் வெளியாகி, தனுஷிற்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. கார்த்தியின் சர்தார் திரைப்படத்துடன் போட்டி போட்ட இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பிரின்ஸ் திரைப்படத்தை பல திரையரங்குகளில் இருந்து தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள், சர்தார் படத்தை திரையிட்டனர்.
இந்த தோல்வியிலிருந்து மீள மிகவும் கஷ்டப்பட்ட சிவகார்த்திகேயன், மண்டேரா திரைப்படத்தின் மூலம் தேசிய விருதைப் பெற்ற மடோனா அஸ்வின் உடன் சேர்ந்து மாவீரன் படத்தில் நடித்தார். சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் அதில் வித்தியாசமான முறையில் படத்தை அமைத்ததால், மாவீரன் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுக்கும் சிறந்த கம்பேக்காக இது அமைந்தது. இந்தப் பட்டியலில் நாம் அடுத்து பார்க்கப் போவது நடிகர் விஷாலை தான்.
சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்து கதகளி, வீரமே வாகை சூடும், அயோக்யா, லத்தி என விஷால் நடித்த அத்தனை திரைப்படங்களும் படு தோல்வியை சந்தித்தன. இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அவருக்கு இந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. எஸ் ஜே சூர்யா வின் நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் எட்டியது. இதேபோல் ராகவா லாரன்ஸிற்க்கும், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தோல்வியை கொடுக்க, அதற்கு ஈடாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெற்றியை கொடுத்தது.





