தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல பிரச்னைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் நேற்று இரவு அவர் காலமானார். அவருக்கு வயது 95.
நடிகர் கமல்ஹாசன் நடித்த நூறாவது படம் ராஜபார்வை மற்றும் அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன காமராஜன் காதலா காதலா பேசும் படம் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தெலுங்கில் சொம்மோகடிதி சோகொகடிதி என்ற படத்தை 1979ம் ஆண்டில் இயக்கினார்.
கமல் – சிங்கீதம் கூட்டணியில் வெளியான முதல் படம் இது. இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தமிழில் இந்த படம் இரு நிலவுகள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. கமல்ஹாசன் தயாரித்த மகளிர் மட்டும் படத்தை இயக்கியவரும் சங்கீதம் சீனிவாசராவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிங்கீதம் சீனிவாசராவ் மறைவுக்கு நேரில் வந்து அவரது உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளரிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, நீண்ட கதை. பெரிய நட்பு. நட்பு என்று சொல்வதற்கு வயது எனக்கு பொருந்தாது. ஆனாலும் அதுதான் எங்களுக்கு இருக்கின்ற உறவு. இளமையில் மரணம் கொடியது. ஆனால் அவர் இப்படித்தான் இறக்கப் போகிறேன் என்று சிறுவயதிலேயே முடிவு செய்துவிட்டார். சிங்கீதம் இளமையில் மாண்டு விட்டார் என்றுதான் சொல்வேன்.
அவர் உடலுக்குதான் வயது அதிகம். மனசு இளமையானது. எல்லோருக்கும் அவர் மிகச் சிறந்த உதாரணம். அவர் இயக்கிய எல்லா திரைப்படங்களும் முக்கியமான திரைப்படங்கள். என் வாழ்க்கையில் என்னை செதுக்கிய பலரில் இவரும் ஒருவர். மனதில் பட்டதை சொல்லக்கூடியவர். அதுதான் இளமையின் பொருள். அவர் இளமையின் ரகசியமும் கூட என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
அதன்பிறகு தனது வலைதள பக்கத்தில் கமல் தனது பதிவில், சிங்கீதம் காரு தன் இஷ்டப்படி இளமையுடன் உயர்நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்ற வேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களும் நானும் ஒருவன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். மேலும் நடிகைகள் கௌதமி ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோரும் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.





