நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் போர்டு தணிக்கை சான்று தர தாமதப்படுத்தியதால் இந்த படம் இன்று அறிவித்தபடி வெளியாகவில்லை. இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று காலை 10 மணிக்கு முக்கிய தீர்ப்பு வெளியாக உள்ளது. அதன்பிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தவெக கட்சித் தலைவராக உள்ள நடிகர் விஜய் தொடர்ந்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருவதும் தனது கொள்கை எதிரி பாஜக என்று மேடைகளில் பேசி வருவதும்தான் இந்த பிரச்னைக்கு காரணம். அரசியல் அழுத்தம் காரணமாகவே ஜனநாயகன் படத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஜனநாயகன் படம் ரிலீஸ் தடைபட்டது குறித்து திரை பிரபலங்கள் சிலர் விஜய்க்கு ஆதரவாக தங்களது உணர்வுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். நடிகர்கள் சிபிராஜ் ரவிமோகன் இயக்குனர் ரத்னகுமார் நடிகை சனம் ஷெட்டி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி என ஒரு சிலர் தங்களது ஆதரவை விஜய்க்கு தெரிவித்து ஆறுதல் கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாதது குறித்து நடிகர் சிம்பு தனது பதிவில் கூறியிருப்பதாவது, அன்புள்ள விஜய் அண்ணா. பின்னடைவுகள் எப்போதும் உங்களை தடுத்ததில்லை. இதைவிட பெரும் புயல்களை தாண்டி வந்து விட்டீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகம் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும் என்று சிம்பு பதிவிட்டு விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் நடிகர் ஜெய். அவர் வெளியிட்டுள்ள தனது பதிவில், எப்போதும் உங்களை தடுக்க தடை கற்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அதை உடைத்து எறிந்து வருவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்றே. எல்லோரும் போல் ரசிகனாக தம்பியாக ஜனநாயகன் வரும் நாளே பொங்கல் என காத்திருக்கிறேன் அண்ணா என்று ஜெய் கூறியிருக்கிறார்.
நடிகர் சாந்தனு வெளியிட்ட ஒரு பதிவில், ஜனநாயகன் வெளியீட்டில் நடப்பதை பார்த்து மனம் உடைந்தது. எதுவாக இருந்தாலும் சரி எல்லா ரசிகர்களும் பார்வையாளர்களும் ஜனநாயகன் குழுவினருக்கு ஆதரவாக நிற்பார்கள். விஜய் அண்ணா ஒரு சகோதரனாக நான் உங்களுடன் இருப்பேன். ஒரு பார்வையாளராக நாங்கள் அணிக்காகவும் ரசிகர் அணிக்காகவும் நிற்போம். ஜனநாயகன் வெளியீட்டில் தான் பொங்கல் தொடங்கும். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று சாந்தனு அதில் கூறியிருக்கிறார்.





