நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் துருவ் விக்ரம் நடிகை அனுபமா பரமேஸ்வரன்,இருவரும் காதலிப்பதாக பல மாதங்களாக தகவல் இருந்தது. இருவரும் இணைந்து பைசன் காளமாடன் படத்தில் நடித்த போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதை இருவரும் எந்த இடத்திலும் வெளிப்படையாக சொன்னதில்லை.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் பிரிவு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் தனது காதலன் பெயரை குறிப்பிடாமல் அவர் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக வலி எனக்குள் இருந்தது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தேன்.
என்னை நானே மீண்டும் கண்டுபிடித்து குணமடைய எனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. நான் அனுபவித்தது சாதாரண காதல் பிரச்சனை அல்ல. அது உளவியல் ரீதியான கடுமையான ஒரு துன்புறுத்தல். இதுபோன்ற விஷயங்களை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் வலியும் வேதனையும் தெரியும். காதலிக்கும் போதும் காதலின் மீது நம்பிக்கை வைத்து தனிப்பட்ட காயங்களையும் வலிகளையும் பகிர்ந்து கொண்டேன்.
அப்படி என்னைப்பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்மூலம் ஒரு ஆழமான உணர்ச்சிபூர்வமான இணைப்பை உருவாக்கினார். ஆரம்பத்தில் அது நம்மை கட்டுப்படுத்துவது போல தெரியாது. மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பது போலத்தான் இருக்கும். ஆனால் காலப்போக்கில் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாக நம்மீது ஆதிக்கம் செலுத்த தொடங்குவார்கள். அப்படித்தான் அவர் சொல்லச் சொல்ல எனக்கே தெரியாமல் என்னுடைய சுய விருப்பங்கள் மாறத் தொடங்கின.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் என் காதலர் ரெமோவாக இருப்பார். அப்போது இப்படி ஒரு காதலரா என்று எனக்கு நினைக்கத் தோன்றும். அந்த அளவுக்கு அன்பை காட்டுவார். அதுவே மறுநாள் அந்நியனாக மாறிவிடுவார். அதற்கு மறுநாள் குழந்தை போல் வந்து மன்னிப்பு கேட்டு கெஞ்சுவார். இதுதான் தொடர்ந்து 2 ஆண்டுகளாக மாறி மாறி சுழற்சி போல் நடந்து வந்தது. காதலிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.
அவர்கள் குடும்பத்தினர் என் வீட்டுக்கு வந்தனர். என் பெற்றோர் அவர்களது வீட்டுக்கு சென்றனர். இப்படி 3 மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் எங்கு நடத்துவது, எத்தனை பேர் வர வேண்டும் என்ற பேச்சுக்கள் எல்லாம் வந்தன. ஆனால் நிச்சயதார்த்தத்தை நான் பலமுறை தள்ளிப் போட்டேன். இது சரியான நேரமில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளலாம். நீ உன் கேரியரில் கவனத்தைச் செலுத்து. நமக்கு இன்னும் வயது இருக்கிறது என்று தொடர்ந்து கூறினேன். பணத்திற்காக நான் அந்த உறவில் இருந்திருந்தால் நிச்சயதார்த்தத்தை ஒருபோதும் நிறுத்தி இருக்க மாட்டேன் என்று அந்த நேர்காணலில் அனுபமா பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.





