ஒரு நல்ல படம் தனக்கான வெற்றியை அதுவே தேடிக்கொள்ளும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தாய்கிழவி படம் ஒரு சிறந்த படைப்பாக வெற்றி பெற்றிருக்கிறது. யதார்த்தமான கதைக்களமும் யதார்த்தமான கதாபாத்திரங்களும் வசனங்களும் இந்த படத்தை பெரிய அளவில் ஜெயிக்க வைத்திருக்கிறது.
அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்த படம் தாய்க்கிழவி. கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி தாய்க்கிழவி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக எஸ்கே புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது.
சுமார் 10 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இதில் பவுனுத்தாயி என்ற வயதான மூதாட்டி கெட்டப்பில் நடிகை ராதிகா தனது சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் படத்தின் ஆரம்பம் மற்றும் இறுதியில் என அவர் படம் முழுக்க வரும் காட்சிகள் மிகவும் குறைவுதான்.
மேலும் இந்த படத்தில் சிங்கம் புலி அருள்தாஸ் பால சரவணன் இளவரசு முனீஸ்காந்த் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்திருந்தனர். தாய்கிழவி படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இன்றுள்ள சூழலில் உறவுகளுக்கு மத்தியில் இருந்து வரும் இணக்கமற்ற சூழல் குறித்து நகைச்சுவை கலந்து ஒரு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாக சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை தந்திருந்தார்.
தாய்கிழவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வந்த நிலையில் பெரிய வெற்றி படமாக இது வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளியான சில நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது தாய்கிழவி படம் வெளியாகி இதுவரை 75 நாட்களில் உலகளவில் 90 கோடி ரூபாய் வசூலித்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருப்பதாக தாய்க்கிழவி படக்குழு இணைய பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தாய்கிழவி படத்தின் இயக்குனர் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.





