மிஸ்டர் பச்சன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். அந்த படத்தைத் தொடர்ந்து காந்தா கிங்டம் ஆந்திரா கிங் தாலுகா உள்ளிட்ட பல படங்களின் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். இருப்பினும் அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை.
இதனால் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததன. குறிப்பாக சில நடிகைகள் நடித்து அந்த படங்கள் தோல்வி அடைந்தால் அவர் ராசி இல்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. அதன் பிறகு சினிமாத்துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அவர் ஒரு ராசி இல்லாத நடிகை என்ற ஒரு அப்பட்டமான பழி விழுந்து விடுகிறது.
இந்த நிலையில் தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ள லெனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடந்த லெனின் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது மன வேதனையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அந்த விழாவில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் பேசியதாவது, ஒரு படத்தின் வெற்றியையும் தோல்வியையும் பற்றிய என்னுடைய பார்வை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு நடிகையாக நான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்வதே வெற்றி. ஆனால் பல படத்தின் வசூலையே வெற்றியின் அளவுகோலாக பார்க்கிறார்கள்.
நான் சரியாக நடிக்கவில்லை என்றாலோ ஒரு காட்சியை சரியாக வெளிப்படுத்தவில்லை என்றாலோ அல்லது என் நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ ஒரு நடிகையாக நான் தோல்வி அடைந்ததாக ஏற்றுக்கொள்வேன். ஆனால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைவாக இருந்தால் அது என்னுடைய தோல்வி என்று கூறுவது சரியல்ல.
ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு கதாநாயகியை மட்டுமே குறை சொல்வது நியாயமற்றது. தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்தால் உடனே துரதிஷ்டசாலி என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். நானும் இது போன்ற விமர்சனங்களை கடந்து வந்திருக்கிறேன். என்னை மட்டுமல்ல எந்த கதாநாயகியையும் அப்படி விமர்சிப்பது தவறு என்று பாக்யஸ்ரீ போர்ஸ் பேசியிருக்கிறார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.





