சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தில், ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். ஸ்ரீ லீலா அதர்வா உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் நூறாவது திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படத்தை கையில் எடுத்து இருக்கிறார் சுதா கொங்கரா. 1960 காலகட்டங்களில் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி தான் இதன் கதை எழுதப்பட்டிருக்கிறதாம். இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களாக, சிவகார்த்திகேயன் அதர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே உள்ள வளாகத்தில் நடத்தப்பட்டது. பிறகு சிதம்பரம், காரைக்குடியில் படமாக்கினார்கள். அடுத்ததாக இலங்கையில் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் தனது போர்ஷனை மே மாதத்திற்குள் முடிக்க சுதாவிடம் சிவகார்த்திகேயன் கேட்டிருப்பதாகவும் அதற்கு இயக்குனர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த லைன் அப்பில் இருக்கும் கதைகள் தான். ஏற்கனவே அவர் முருகதாசுடன் இணைந்து மதராசி திரைப்படத்தில் நடித்தார். சென்னையை மையப்படுத்தியே இந்த திரைப்படத்தின் கதை நகரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் திரைப்படத்தை எடுக்க முருகதாஸ் சென்று விட்டார். இந்த திரைப்படம் வரும் ரம்ஜானுக்கு வெளியாகிறது. இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன்பிறகே மதராசி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இதனை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்ததாக மலையாள இயக்குனர், ஜுடே ஆண்டனி ஜோசப் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே 2018 எனும் திரைப்படத்தை இயக்கி பிரபலம் அடைந்தவர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறுகிறார்கள்.





