தமிழ் சினிமாவில் 30 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நடிகை ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றால் 30 ஆண்டுகள் வரை சினிமாவில் தாக்குபிடித்து வலம் வர முடியும். அப்படி தான் கேஆர் விஜயா சரோஜா தேவி பானுமதி பத்மினி சாவித்திரி போன்ற நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் நீடித்து நடித்தார்கள்.
அதன்பிறகு வந்த நடிகைகளில் ரேவதி ராதிகா சுகாசினி சரிதா போன்றவர்களும் கவர்ச்சியின்றி நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றனர். ஆனால் குஷ்பு ரோஜா மீனா ரம்பா நக்மா காலகட்டம் வந்த பிறகு கவர்ச்சியால் மட்டுமே நடிகைகள் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற முடியும் என்கிற ஒரு மோசமான சூழல் சினிமாவில் உருவானது. அது இன்னும் தொடர்கிறது.
இந்நிலையில் இந்தி நடிகை ஹூமா குரேஷி இதுகுறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். இவர் தமிழில் ரஜினிகாந்த் உடன் காலா என்ற படத்திலும் நடிகர் அஜீத் குமார் நடித்த வலிமை என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அடுத்து டாக்ஸிக் என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் ஹூமா குரேஷி நடித்துள்ளார். அவர் நடித்துள்ள பேபி டூ டை டூ என்ற இந்தி படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அவர் காது கேட்காத வாய் பேச முடியாத ஒப்பந்த கொலையாளி கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து பேசிய நடிகை ஷூமா குரேஷி கூறியதாவது, இந்த படத்தில் பேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சாதாரண தோற்றம் கொண்ட மும்பை புறநகர் ரயிலில் பயணிக்கும் ஒரு பெண்ணைப் போலவே அந்த கேரக்டர் இருக்கும். அதுவே அந்த கதாபாத்திரத்தை தனித்துவம் ஆக்குகிறது.
பெண்களை இயல்பானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் அதிகம் எழுதப்பட வேண்டும். பெண் கொலையாளிகள் எப்போதும் ஏன் இறுக்கமான தோல் ஆடைகள் உயரமான ஹீல்ஸ் அணிந்து கவர்ச்சியாகவே ஏன் தோன்ற வேண்டும்? அது யதார்த்தம் அல்ல.
பெண்களை ஆணாதிக்க கண்ணோட்டத்தில் பார்க்கும் மனப்பான்மையில் இருந்து தான் அந்த சித்தரிப்பு உருவாகிறது. சக்தி வாய்ந்தவர்களாக காட்டப்படுவதற்கு பெண்களை கவர்ச்சி பொருளாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை இயல்பானவர்களாகவே திரைப்படங்களில் காட்டலாம் என்று நடிகை ஹூமா குரேஷி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





