தமிழ் சினிமாவில் நடித்த பல மும்பை நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே தமிழ் ரசிகர்களின் மனதில் வெகு எளிதில்
இடம்பிடித்து விடுகின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. கடைசியில் நடிகர் சூர்யாவின் மனதிலும் இடம்பிடித்து, தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்படும் நடிகர் சிவக்குமாரின் மூத்த மருமகளாகியும் விட்டார்.
துவக்கத்தில் ஜோதிகா நடிப்பு சாதாரணமாக இருந்தாலும் நாளடைவில் அவரது நடிப்பும், இயல்பும் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. குஷி, வாலி, திருமலை, டும் டும் டும், காக்க காக்க போன்ற படங்களில் அவரது நடிப்பு வேற லெவலில் பேசப்பட்டது. பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம், சந்திரமுகி போன்ற படங்களில் மிரட்டல் நடிப்பையும் வெளிப்படுத்தினார்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட ஜோதிகா, தனக்கு பிடித்தமான கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் என்றால் உடனே ஓகே சொல்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் டைரக்டர் ஜியோ பேபி இயக்கிய காதல் தி கோர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வெற்றிப் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை ஜோதிகா கூறியதாவது, மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடித்தது மிகவும் வித்யாசமாக இருந்தது. நான் நிறைய படங்களில், பல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் மம்முட்டி மிக வித்யாசமானவர். அதிக தன்னம்பிக்கை கொண்டவர். இந்த மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க தனியாக ஒரு தைரியம் வேண்டும். அதை அவரிடம் நான் கண்டுகொண்டேன்.
சினிமாவில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். எனக்கும் பெரிய படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வருகிறது. ஆனால் முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் நடிக்க கேக்கின்றனர். இப்படி கேக்க உங்களுக்கு கேவலமாக இல்லையா என்றுதான் நான் அவர்களை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ஹீரோவுக்கு அருகில் நின்றுவிட்டு செல்லும் கேரக்டர்களில் எல்லாம் நடிக்க முடியாது. அந்த மைண்ட் செட்ல என்னால நடிக்க முடியாது. என் கேரக்டருக்கு மதிப்பு, மரியாதை வேண்டும். அந்த மாதிரி 2, 3 சீன் இருந்தால் கூட அந்த படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்.
மலையாளத்தில் மம்முட்டி உடன் நடித்த காதல் தி கோர் படத்தில் அவருக்கு சமமான கேரக்டர் எனக்கு தரப்பட்டிருந்தது. என் நடிப்பை வெளிப்படுத்த எனக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. அந்த கேரக்டருக்கான ரெஸ்பெக்ட் இருந்தது. இந்த மாதிரியான கதைகளில், கேரக்டர்களில் சின்ன ரோலாக இருந்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா





