கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடிகர் அஜீத்குமார் சினிமாவில் நடிப்பதை இரண்டாம்பட்சமாக வைத்து விட்டு தொடர்ந்து கார் ரேஸில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முழுவதும் அவர் வெளிநாடுகளில் நடந்த கார் ரேஸில் மட்டுமே கலந்துக்கொண்டார். தனது அடுத்த படம் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அவருக்கு தமிழ் சினிமாவில் போட்டியாக கருதப்பட்ட அஜீத்குமார் சினிமாவில் பல படங்களில் நடிப்பார் என ஆர்வமாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விஜய்க்கு அரசியல் என்றால் எனக்கு கார் ரேஸ் என்று சொல்வது போல அஜீத்குமாரின் நடவடிக்கைகள் இருந்தது ரசிகர்களை அப்செட் ஆக செய்திருக்கிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடிகர் அஜீத்குமார் துபாயில் இருந்து வருகிறார். அங்கு அவருக்கு சொந்தமாக 2 பங்களா வீடுகளும் உள்ளன. வழக்கமாக நடிகர் அஜீத்குமார், சக நடிகர்கள் நடிகைகள் மற்றும் தன்னுடன் நடிக்கும் கலைஞர்களுடன் நெருக்கம் காட்டி பழகாதவர். யாராக இருந்தாலும் நெருக்கமாக பழகும் தன்மை அஜீத்குமாருக்கு இல்லை.
சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்திலிருந்து அதை அவர் கடைபிடித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக துபாயில் நடிகர் அஜீத்தை சந்திக்க செல்லும் திரை பிரபலங்கள் அதிகமாகி விட்டனர். நடிகர்கள் சிலம்பரசன் சிபிராஜ் நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் என துபாய்க்கு சென்று நடிகர் அஜீத்குமாரை பலரும் சந்திப்பது வழக்கமாகி விட்டது.
திடீரென இப்படி அஜீத்குமாரை சிலர் துபாய் வரை சென்று பார்க்க வேண்டியது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கான பதில் இப்போது கிடைத்து உள்ளது. அஜீத்குமாரை துபாயில் சந்தித்த யாருமே அவர்களாக துபாய்க்கு செல்லவில்லை. அவர்கள் திட்டமிட்டு துபாய்க்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற ஒரு புதிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
அஜீத்குமாரின் கார் பந்தயத்திற்கு ஸ்பான்சர் உதவி செய்யும் குளிர்பான நிறுவனம், துபாயில் கூட்டத்தை கூட்டினால் தான் தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நிபந்தனை விதித்துள்ளதால் ஸ்பான்சர்களின் விருப்பத்திற்காக நடிகர் அஜீத்குமார் தரப்பு, தமிழ் சினிமா சார்ந்த நடிகர் நடிகைகளை துபாய்க்கு வரவழைக்கிறது. அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிறது என மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





