கோலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் நடிப்பு அசுரனாக விளங்குபவர் தனுஷ். தனது இரண்டாவது திரைப்படமான காதல் கொண்டேன் படத்திலேயே, இதனை நிரூபித்த அவர் தனது நடிப்புக்கு தீனி போடும் நிறைய திரைப்படங்களில் நடித்து விட்டார். ஆரம்ப காலகட்டத்தில் புதுப்பேட்டை திரைப்படத்தில் கொக்கி குமாராக வாழ்ந்த தனுஷை பார்த்து பலரும் வியந்து போயினர்.
அந்த திரைப்படத்திற்கே அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பேசப்பட்டது. ஆனால் அப்போது அது நடைபெறாமல் இருக்க, சில ஆண்டுகள் இடைவெளி கழித்து ஆடுகளம் திரைப்படத்திற்காக தேசிய விருதை தட்டி சென்றார் தனுஷ். தொடர்ந்து அசுரன் திரைப்படத்திற்காகவும் தேசிய விருதை இரண்டாவது முறையாக அவர் வாங்கினார்.
நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் என தனுசுக்கு பன்முகம் உண்டு. இதில் எதிர் நீச்சல் திரைப்படத்தின் மூலம் தனது தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார்ஷை அவர் தொடங்கினார். பின்னர் காக்கி சட்டை, காலா என ஏராளமான திரைப்படங்கள் தனுஷின் தயாரிப்பில் வெளிவந்தன. தனது கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் உடன் மீண்டும் இணைய போவதாகவும், இதனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது வொண்டர் பார் நிறுவனமே தயாரிக்கும் என்றும் அவர் கூறினார்.
இது ஒரு பக்கம் இருக்க, பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தனுஷ். தனது முதல் திரைப்படத்திலேயே வயது முதிர்ந்தவர்களுக்கிடையே இருக்கும் இளமை காதலை அழகாகச் சொல்லி அவர் அசர வைத்தார். ராஜ்கிரண் ரேவதி ஆகியோரின் முதிர்ச்சியான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 50-வது திரைப்படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதில் செல்வராகவன் எஸ் ஜே சூர்யா துஷாரா விஜயன் அபர்ணா பாலமுரளி சந்திப் கிஷன் என ஏராளமான நடித்துள்ளனர். வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக தனுஷ் தெரிவித்திருந்தார். ஜூலை மாதத்தில் தொடங்கிய சூட்டிங்கை, ஒரே கட்டமாக முடித்திருக்கிறார் தனுஷ்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளையும் தனுஷ் தற்போது தொடங்கி உள்ளாராம். நடிகரின் உறவினரான வருண்தான் இந்த படத்தின் ஹீரோவாம். அதுபோக விசுவாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தவருக்கும் இதில் முக்கிய கதாபாத்திரமாம். இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க, தற்போதுவரை அவர் மூன்று பாடல்களை முடித்துள்ளாராம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.





