நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படம் உருவாகி வருகிறது. ஏறக்குறைய 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் இறுதிக்குள் படப்பிடிப்பை முழுவதுமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் விஜய் அப்பா, மகன் என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சிநேகா நடிக்கிறார். இவர் பல ஆண்டுகளுக்கு முன், வசீகரா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி என்ற நடிகை ஜோடியாக நடிக்கிறார். இவர், நாளை வெளியாகிற சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜயின் நண்பர்கள் கேரக்டரில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். இதில் வில்லன் கேரக்டரில் மைக் மோகன் நடிப்பது தெரிய வந்துள்ளது. இவர் மெல்லத் திறந்தது கதவு, இதயக்கோவில், நான் பாடும் பாடல், மௌன ராகம் படங்களில் நடித்த வெள்ளி விழா நாயகன் மோகன் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் மட்டுமின்றி இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விடிவி கணேஷ், கஞ்சா கருப்பு, சுதீஷ், பிரேம்ஜி, வைபவ் என பலரும் நடித்துள்ளனர். இதனால் படம் முழுக்க ஒரே நட்சத்திர கூட்டமாக இருக்கப் போகிறது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. விஜய் முதன்முறையாக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பிறகு நடிப்பாரா, அல்லது அரசியலில் இறங்கி விடுவாரா என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு நீடிக்கிறது. ஏனெனில் இதுவரை விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் முறையாக வெளியே வரவில்லை.
இதற்கிடையே கோட் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை நடிக்கிறார். அவர். பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான நடிகை கனிகா தான். வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சன் டிவியில் பிரபலமான சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவியாக கனிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது கோட் படத்தில் நடித்து வருகிறார்.





