நடிகை குஷ்புவின் மகள்கள் குறித்து அவ்வப்போது சிலர் இணையத்தில் கலாய்த்தும் கேலியும் பேசி கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது, இது என் குடும்பம். அன்பு நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில் உருவானது. இன்று நாங்கள் இருக்கும் நிலையை அடைய நாங்கள் பல போராட்டங்களை சந்தித்தோம். உடல்வருந்த கடினமாக உழைத்தோம். இரத்தமும் வியர்வையும் சிந்தினோம்.
சில சமயங்களில் நாங்கள் தடுமாறி இருக்கலாம். தோல்வி அடைந்திருக்கலாம் அல்லது கீழே விழுந்திருக்கலாம். ஆனால் மீண்டும் முழு வீச்சோடு போராடி வெற்றி பெறுவதை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை. எங்கள் குழந்தைகளை மிகுந்த அக்கறையுடன் வளர்த்தோம். அவர்கள் வெற்றியால் திசை திருப்பப்படுவதையோ அல்லது பிரபலங்களின் குழந்தைகள் என்ற அந்தஸ்தை அனுகூலமாக பயன்படுத்திக் கொள்வதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
அவர்கள் யார் என்பதை வைத்து அவர்கள் ஒருபோதும் எந்த சலுகையையும் பெற முயன்றதில்லை. எங்கள் குழந்தைகளை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். யாரோ சில அற்ப மனிதர்கள் என் குழந்தைகளை அவமதிக்கவும் மரியாதை இன்றி நடத்தவும் அல்லது வெறும் 2 நிமிட மலிவான விளம்பரத்திற்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளவோ ஒரு தாயாக நான் அனுமதிக்க மாட்டேன். அத்தையை மனிதர்களின் மனநிலை மிகவும் மோசமானது. தரம் தாழ்ந்தது மற்றும் நாகரீகமற்றது.
அது அவர்களின் வளர்ப்பையே தெளிவாக பிரதிபலிக்கிறது. அவர்கள் பேசும் அதே மொழியிலும் அதே பாணியிலும் பதிலடி கொடுக்க எனக்கு தெரியும். ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன். என் தாயையும் அவர் எனக்கு அளித்த வளர்ப்பையும் அவமதிக்க நான் விரும்பவில்லை. ஆனால் நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக உங்கள் அருவருப்பான கேவலமான மனநிலையை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். ஒரு தாயை ஒருபோதும் சீண்டாதீர்கள்.
நினைவில் கொள்ளுங்கள். ஒரு தாய் காயமடைந்த புலி போன்றவள். தன் குட்டிகளைக் காக்க அவள் பாய்ந்து தாக்கி அழித்து விடுவாள். இந்த செய்தி என் குழந்தைகளையும் குடும்பத்தையும் பயன்படுத்தி கேலி சிரிப்புகளையும் பெற நினைக்கும் அந்த தரம் தாழ்ந்த நபர்களுக்கானது மட்டுமல்ல.தங்கள் குடும்பத்தை காப்பாற்ற பணம் சம்பாதிப்பதற்காக எங்களைப் பற்றி அமர்ந்து பேசும் யூடியூபர்கள் அனைவருக்கும் இது ஒரு தெளிவான செய்தி. இனி பொறுத்துக் கொள்ள முடியாது.
இன்று நமக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால் இந்த மட்டமான மனிதர்கள் நம்மை மிதித்து செல்வார்கள். அவர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் எங்களுக்குள் இருக்கும் வலிமை விலைக்கு வாங்கப்பட்டது அல்ல. அது கடின உழைப்பால் ஈட்டப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்வது இதுதான். உங்களுக்காக நீங்கள் உறுதியாக நில்லுங்கள். மற்றவர்கள் உங்களை மதிக்க தவறினால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களை நீங்களே மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் என்று நடிகை குஷ்பு அந்த பதிவில் கூறியிருக்கிறார்





