திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் ரிதன்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. 2.5 கோடி ரூபாய் செலவு செய்து மிக பிரமாண்டமாக இந்த திருமணம் நடத்தப்பட்டது.
மேலும் மணப்பெண் ரிதன்யாவுக்கு 300 சவரன் நகைகள் மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வால்வோ கார் என வரதட்சணையும் வழங்கப்பட்டது. ஆனால் 500 சவரன் சொல்லிவிட்டு, 300 சவரன் மட்டுமே போட்டதாக கூறி கணவன் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி, அந்த பெண் ரிதன்யாவை துன்புறுத்தி வந்தனர்.
இதனால் மனரீதியாக பாதிப்படைந்த ரிதன்யா, விஷம் குடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரிதன்யாவின் கணவர் கவின்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர். மாத வாடகையாக மட்டுமே ரூ. 10 லட்சம் வந்த நிலையில் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இப்போது 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது, பெற்றோர்களுக்கு ஒரே ஒரு விஷயம் சொல்றேன். உங்க பெண் சந்தோஷமாக வாழ வரதட்சணை கொடுக்கிறதோ அல்லது என் பெண்ணுக்காக ஆசையா கொடுக்கறேங்கற பேர்ல வரதட்சணை தர்றதோ வேண்டாம். பெண்ணை கட்டிக் கொடுத்ததால் உங்க பெண் இல்லாமல் போவதில்லை.
தயவுசெய்து உங்க பெண்களுக்கு திருமண வரதட்சணை கொடுக்காதீர்கள். உங்க பொண்ணுக்கு என்ன பண்ண போறீங்கன்னு கேட்டா அப்படி ஒரு குடும்பத்துல உங்க பொண்ணை கட்டிக் கொடுக்காதீங்க. அப்படி கேட்கறவங்க நாளைக்கு அது வேணும் இது வேணும் என்று வாய் திறந்து கேட்பாங்க.
ரெண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக நான் சொல்றேன். என் பொண்ணுங்களை நான் கட்டிக் கொடுத்தாலும் என்னைக்குமே அவங்க என் குழந்தைகள்தான். என் மகள்களாக தான் இருப்பாங்க. அப்புறம்தான் இன்னொருத்தரோட மனைவியா, மருமகளா இருப்பாங்க. ஆனா எங்க வீட்டுல அவ மகளாக தான் இருப்பா. ஒரு பிரச்னை என்றால் வீட்டுக்கு திரும்பி வரலாம். என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





