நடிகை மீரா மிதுன் ஒரு மாடல் அழகியாக இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். தமிழில் 8 தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம் போதை ஏறி புத்தி மாறி போன்ற சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டில் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் மீரா மிதுனும் ஒரு போட்டியாளராக பங்கேற்ற வகையில், பார்வையாளர்கள் மத்தியில் அவர் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகை மீராமிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக கடந்த 2021ம் ஆண்டு அவர் மீது பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது நடிகை மீரா மிதுன் தொடர்ந்து நேரில் ஆஜராகாததால், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது. பிடிவாண்டு உத்தரவை நிறைவேற்றும் வகையில் நடிகை மீரா மிதுனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் டெல்லி போலீசார் மூலம் நடிகை மீரா மிதுன் டெல்லியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை அங்கு போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அங்குள்ள ஒரு காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். இன்னும் போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து வரவில்லை.
இந்நிலையில் நேற்று அந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எஸ் கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அரசு வக்கீல் எம் சுதாகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை சென்னைக்கு அழைத்துவர முடியவில்லை.
பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவரது உடல்நலம் சீரானதும் சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம் என கூறப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது





