சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த அந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் செந்தில் உள்ளிட்ட ஏராளமானனோர் நடித்தனர். ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது. இப்படியான சூழலில் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஜெய் பீம் திரைப்படத்தை எடுத்து அவரது கவனத்தையும் ஈர்த்த ஞானவேல் தான் இந்த படத்தின் இயக்குனர்.
இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத்பாசில், ரானா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் திருநெல்வேலி திருவனந்தபுரம் மும்பை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
80 சதவீத சூட்டிங் பணிகள் நிறைவடைந்து இருக்கும் சூழலில், தற்போது இறுதி கட்டத்தை பட குழு எட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இதற்காக திரைக்கதை எழுதும் பணியில் இயக்குனர் ஈடுபட்டு வருகிறார்.
முதலில் மார்ச் மாதம் இதற்கான பணிகள் ஆரம்பமாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் ரஜினி மீண்டும் நெல்சன் உடன் இணைவது உறுதியாகி இருக்கிறது. தொடர் தோல்விகளை கண்டு வந்த ரஜினிக்கு ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் தான் நெல்சன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அந்தப் படத்தில் நடித்த மிர்னா மேனன் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் சமீபத்தில், நெல்சனை தொடர்பு கொண்ட போது அவர் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வருகிறேன் என தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். படத்தில் தான் இடம் பெறுவது பற்றி இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தில் அவர் ரஜினிக்கு மருமகளாக நடித்தது குறிப்பிடத்தக்கது.





