தமிழ் சினிமாவில் நடிகைகள் அம்பிகா, ராதா இடத்தை இன்று வரை யாரும் நெருங்கவில்லை என்று தாராளமாக சொல்லாம். அந்தளவுக்கு கடந்த 1980, 90களில் இந்த இரட்டை சகோதரிகள் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக ஆட்சி செய்தனர். ரஜினி, கமல் என மாறி மாறி இருவரும் பல படங்களில் ஹீரோயின்களாக நடித்தனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அன்று முன்னணி நடிகர்கள் பலரும் தங்களது படத்தில் கதாநாயகியாக ராதா அல்லது அம்பிகா இருவரில் யாராவது ஒருவர் என்ற நிலையில்தான் நடித்தனர். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முன்னணி நடிகைகளாக வலம் வந்தனர்.
இதில் நடிகை ராதா பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் அறிமுகமானார். அடுத்து பல படங்களில் நடித்தார். இவரது சினிமா பயணத்தில் முதல் மரியாதை இன்றுவரை ராதாவின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.
நடிகை ராதா விஜயகாந்துடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், உழவன் மகன் உள்ளிட்ட படங்களில் ராதா, விஜயகாந்த் ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்தது. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராதா என்பதால் இப்போதும் அந்த படங்களில் அவரது நடிப்பை மக்கள் ரசிக்கவே செய்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் காலமான நடிகர் விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்த நடிகை ராதா, அங்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராதா, சினிமாவில் நடித்த பிறகு கடைசியாக, ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் ஒருமுறை விஜயகாந்தை சந்தித்தேன். அதற்கு பிறகு அவரை நேரில் பார்க்கவில்லை.
என் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க வீட்டுக்கு போன போது அவரை பார்க்க முடியவில்லை. பிரேமலதா அக்காவிடம் அழைப்பிதழ் கொடுத்தேன். அக்கா, ஒருநாள் முன்பே திருமணத்துக்கு வந்து ஆசிர்வாதம் செய்துவிட்டு சென்றார். கடைசியில் அவரை இப்படி ஒரு சூழ்நிலையில் வந்து பார்ப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை என்றவர் கதறி அழுதார். பின்பு, நல்லது செய்தவர்கள், நம்முடன் இருப்பார்கள் என்று கூறினார்.





