இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த பல படங்களில், சில படங்களில் அவருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் ராதிகா சரத்குமார். அதில் தாவணிக்கனவுகள் இன்றுபோய் நாளை வா பொய் சாட்சி என 3 படங்களில் கே பாக்யராஜூடன் ராதிகா இணைந்து நடித்துள்ளார்.
அத்துடன் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் ராதிகா நடிகையாக அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குனராக பணி செய்தவரும் கே பாக்யராஜ். முதல் படத்தில் நடிகை ராதிகாவுக்கு நடிப்பு வசனங்கள் சொல்லிக் கொடுத்த அனுபவமும் கே பாக்யராஜூக்கு உண்டு.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, கே பாக்யராஜூடன் அதிக படங்களில் நடித்தது நான்தான். இதில் இன்று போய் நாளை வா படம் குறித்து நான் சொல்லியே ஆக வேண்டும். அந்த கருப்பு சட்டை வெள்ளை பேண்ட் காமெடி அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
எல்லோரும் சிரிக்க வைக்கும் காமெடி தான் எழுதுவார்கள். ஆனால் சிந்திக்க வைக்கும் காமெடி தரும் திறமை கே பாக்யராஜூக்கு மட்டுமே உள்ளது. அந்த படம் வெளியான போது அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததை பார்த்து நான் மகிழ்ந்து போனேன்.
நானும் கே பாக்யராஜூம் நடித்த படங்களை நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும். நானும் அவரும் நடிக்கும் காட்சிகளில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேச மாட்டோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து டயலாக் பேச மாட்டோம். நான் சிரிப்பேன். என்னை பார்த்து அவர் சிரிப்பார்.
அதனால் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கவே மாட்டோம். நான் எங்கேயோ பார்த்து பேசுவேன். அப்புறம் அவர் குளோசப் போயிடுவார். பழைய படங்கள் எல்லாம் பார்த்தால் அது நன்றாக தெரியும். இன்று போய் நாளை வா படத்தில் மட்டுமே கொஞ்சம் முகம் பார்த்து பேசி நடித்திருப்போம் என்று நடிகை ராதிகா சரத்குமார் அந்த விழாவில் பேசியிருக்கிறார். இதை பார்வையாளர் பகுதியில் இந்த கே பாக்யராஜூம் தலையசைத்து ஆமோதித்தாா்.





