தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமான அவர் தமிழில் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். குறிப்பாக ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் போன்றவர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்துடன் ராதிகா நடித்த நல்லவனுக்கு நல்லவன் போக்கிரி ராஜா கமலுடன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை சிப்பிக்குள் முத்து போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்தன. நடிகர் விஜயகாந்துடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ராதிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரை தயாரிப்பாளராக ராடன் பிக்சர்ஸ் மூலம் பல சீரியல்களை ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார். சித்தி அண்ணாமலை வாணி ராணி போன்ற பல சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். நடிகவேள் எம்ஆர் ராதா மகள், நடிகர் ராதாரவியின் சகோதரி, நடிகர் சரத்குமாரின் மனைவி போன்ற முக்கிய அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் இப்போதும் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, எனக்கு பல ஆண்டுகளுக்கு முன் லோ பிரஷர் உடல் நல பிரச்னை இருந்தது. அப்போது படப்பிடிப்பில் அதிகம் நடித்தால் வொர்க் பிரஷர் அதிகமானால் எனக்கு பிளாக் அவுட் ஆகி விடும். அப்படியே மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.
ஒருமுறை ஷூட்டிங் நடந்த போது கமல் வந்து என்னிடம் ரிக்வெஸ்ட் செய்தார். இன்னிக்கு கொஞ்சம் மயக்கி போட்டு விழுந்துடு. இன்னிக்கு நான் கொஞ்சம் ஷூட்டிங்குக்கு டிமிக்கி கொடுக்கணும் என்றார். நான் அதெல்லாம் பண்ண மாட்டேன் என்றேன். எனக்காக கொஞ்சம் பண்ணு என்றார். எனக்காக மயக்கம் போட்டு விழு என்றார். நான் முடியாது என்று கூறிவிட்டேன். அவரும் போய்விட்டார்.
பிறகு இரண்டு மூன்று நாட்கள் ஏவிஎம்மில் ஷூட்டிங் நடந்த பிறகு, ஒரு நாள் லோ பிரஷரில் பிளாக் அவுட்டாகி நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். மயக்கம் தெளிந்து கண்ணை திறந்தால், கமல் முகம்தான் முதலில் தெரிகிறது. சனியன், எப்போ மயக்கம் போடச் சொன்னா எப்போ மயக்கம் போட்டு விழறா பாரு என்று என்னை கோபமாக திட்டினார். எனக்கு ஒண்ணும் புரியலே என்று அந்த நேர்காணலில் ராதிகா சரத்குமார் கூறியிருக்கிறார். இந்த நேர்காணலின் போது நடிகை ஸ்ரீப்ரியாவும் ராதிகாவுடன் இருந்தார்.





