கீதா கோவிந்தம் வாரிசு சுல்தான் புஷ்பா புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நேஷனல் கிரஷ் என்ற செல்லப் பெயரும் இருந்து வருகிறது. தமிழ் தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா இந்தியில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
கடந்த ஆண்டில் வெளியான அனிமல் என்ற படத்தில் நாயகியாக நடித்து இந்தி சினிமாவில் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். தெலுங்கு தமிழ் படங்களை தொடர்ந்து, பாலிவுட்டில் காலடி பதித்தார். அனிமல் படம் மூலம் பாலிவுட் ரசிகர்களிடம் பெரிய கவனத்தைப் பெற்றார். அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ராஷ்மிகா பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.
இதன் மூலம் பான் இந்தியா ஸ்டார் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா மந்தனா மாறி இருக்கிறார் சமீபத்தில் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு குபேரா படம் வெற்றியைப் பெறவில்லை.
இந்தியில் வெளியான அனிமல் படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தாலும், அனிமல் படம் பற்றிய சர்ச்சைகள் மட்டும் இன்னும் போகவில்லை. குறிப்பாக ரன்பீர் கபூர் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், ராஷ்மிகா நடித்திருந்த முத்தக் காட்சிகள், படுக்கை அறை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பலத்த அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவேசமாக பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, படத்தை படமாக மட்டும் பார்த்தால் நல்லது. படத்தில் ஹீரோ புகைப்பிடிக்கிறார் என்றால் அவர் எல்லோரையும் அப்படி செய்ய சொல்கிறார் என்று அர்த்தமாகி விடாது. அப்படி நீங்கள் நினைத்தால் அதுபோன்ற படங்களை நீங்கள் பார்க்காதீர்கள். இங்கே படத்தை பார்க்கச் சொல்லி யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
சினிமா ஒரு பொழுதுபோக்கு துறை. எல்லாவற்றையும் விமர்சிப்பது சரியாகாது. நான் திரையில் புகை பிடிப்பது போல நடிக்க மாட்டேன். என்னை பொறுத்தவரை ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மோசமான நபர் ஒளிந்து இருப்பார். அதை அனிமல் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா காட்டி உள்ளார். அவ்வளவுதான். அதற்கு மேல் அனிமல் படம் குறித்த விமர்சனங்களை பெரிதுபடுத்த வேண்டாம் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவேசமாக பேசி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





