சிவகார்த்திகேயனின் திரை உலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் எதிர்நீச்சல். ஆரம்ப காலகட்டத்தில், கட்டாய வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருந்த அவருக்கு கையில் கிடைத்த பொக்கிஷமாக அமைந்தது எதிர்நீச்சல் திரைப்படம். தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் கிட் அடித்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார். இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளராக பணிபுரிந்த இவருக்கு, இதுதான் இயக்கத்தில் முதல் திரைப்படமாக அமைந்தது.
முதல் திரைப்படம் குறித்த வெற்றியால், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச்சட்டை படத்தை அவர் எடுத்தார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. இதன்பிறகு தனுசை வைத்து கொடி திரைப்படத்தை இயக்கினார் துரை செந்தில்குமார். முதல்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் படத்தில் வில்லி வேடத்தில் த்ரிஷா நடித்திருந்ததும், கொடி படம் வெளியாவதற்கு முன்பே பேசப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகவும் சுமாராகவே இருந்தது. இருப்பினும் முந்தைய காக்கிச்சட்டை திரைப்படத்தை போலவே கொடி திரைப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் தனுசை வைத்து பட்டாஸ் திரைப்படத்தை அவர் எடுத்தார்.
தனுஷ் தந்தை மகன் கேரக்டரில் நடித்திருந்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்படியான சூழலில்தான் துரை செந்தில்குமார் அடுத்ததாக, கருடன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில், சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் திரைப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதி இருக்கிறார். இந்த நிலையில் படத்திற்கான அறிவிப்பு வீடியோ நேற்று வெளியானது. அதில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகிய இரண்டு பேரும் எஜமானர்கள் போன்று இருப்பதும், அவர்களுக்கு விசுவாசியாக சூரி இருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. சூரி சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இது குறித்து பேசி இருக்கும் இயக்குனர் துரை செந்தில்குமார், இது உண்மையான ஒரு நபரை பற்றியது. அந்த நபர் வெற்றிமாறன் சாரை மிகவும் ஈர்த்ததால் இது படமாகி வருகிறது. இது பல்வேறு நட்சத்திரங்களுக்கான திரைப்படம். இதில் ஒரு ஹீரோவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு ஹீரோவுக்கான காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.





