தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம்தான் ராமராஜன், கனகா நடித்த கரகாட்டக்காரன் படம். 35 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1989ம் ஆண்டில் ஜூன் 16ம் தேதி கங்கை அமரன் இயக்கத்தில் கரகாட்டக்காரன் படம் வெளியானது. இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் பாடல்களாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது.
மாங்குயிலே பூங்குயிலே, இந்த மான் உந்தன் சொந்த மான், ஊருவிட்டு ஊருவந்து, பாட்டாலே புத்தி சொன்னார், முந்தி முந்தி விநாயகனே, மாரியம்மா மாரியம்மா, குடகு மலை காற்றில் வரும் என படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய அளவில் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படும் எவர்கிரீன் பாடல்களாக இருக்கின்றன. இதில் மாங்குயிலே பாடல் தனியாகவும், ஜோடி பாடலாகவும் இருமுறை படத்தில் வந்தது.
கிராமத்து நாயகன் ராமராஜன் படங்கள் அப்போது தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் கரகாட்டக்காரன் படம் மிக முக்கியமானது. இதில் கனகா அறிமுகம் செய்யப்பட்டார். கவுண்டமணி செந்தில் காமெடி பெரிய அளவில் வரவேற்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக வாழைப்பழ காமெடி இன்றளவும் ரசிகர்களால் சிலாகிக்கப்படும் காமெடியாக இருந்து வருகிறது.
கரகாட்டக்காரன் படத்தை பொருத்தவரை மிக எளிமையான கதைதான். அக்கா தம்பி சிறுவயதிலேயே பிரிந்துவிட பின்னர் அக்கா மகன், மாமன் மகள் காதலிக்கின்றனர். இருவரது குடும்பமுமே கரகாட்ட கலையை பின்னணியாக கொண்டது. நாயகியை காதலிக்கும் கிராமத்து பண்ணையார் அவர்களை அழிக்க முயற்சிப்பதே கிளைமாக்ஸ் என எந்த டிவிஸ்ட்டும், பரபரப்பும் இல்லாத சாதாரணமான எளிய கதைதான் கரகாட்டக்காரன்.
சிவாஜி, பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் 1989ம் ஆண்டு வெர்ஷன்தான் கரகாட்டக்காரன் என்றால் அது மிகையல்ல. அதில் பரதக்கலை, நாதஸ்வரத்தை இந்த படத்தில் கரகாட்டமாக மாற்றி, நாயகன் நாயகி கலைப் போட்டியை மையப்படுத்தி எப்படியோ ஒரு ரசிக்க கூடிய படமாக கவுண்டமணி, செந்தில் காமெடி, இளையராஜா இசையை வைத்து ஒப்பேத்தி இருந்தார் கங்கை அமரன்.
இந்நிலையில் கரகாட்டக்காரன் படம் தமிழ்நாடு முழுவதும் சக்கைப் போடு போட்டது. பெரும்பாலான தியேட்டர்களில் 100, 150, 200, 275, 365 நாட்கள் என ஓடியது. அதிகபட்சமாக 485 நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் அன்றைய மொத்த வசூல் 5 கோடி ரூபாய்களை கடந்துவிட்டது. ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 35 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த செலவில் தயாரித்து பலமடங்கு வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமை அன்று முதல் இன்று வரை கரகாட்டக்காரன் படத்துக்கே சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.





